ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் மோகன் ராஜா ஜெயம் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சகோதரர் ஜெயம் ரவியுடன் M.குமரன் S/O மகாலட்சுமி,சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.
 
பிறகு தளபதி விஜய் உடன் இணைந்த மோகன்ராஜா வேலாயுதம் திரைப்படத்தை இயக்கினார். அடுத்து மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்த மோகன் ராஜா தனி ஒருவன் என்னும் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார். தனி ஒருவன் திரைப்படம் துருவா என்று தெலுங்கிலும் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நடிகர் பகத் பாசில், சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்த வேலைக்காரன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். 

இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153வது திரைப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் சிரஞ்சீவி 153 திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி  கதாநாயகனாக நடிக்க இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். 

இதனையடுத்து சிரஞ்சீவி 153 திரைப்படத்தின் இசை அமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசையமைப்பாளர் S.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராக உள்ள சிரஞ்சீவி 153 திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் R.B.சௌத்ரி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.