நடிகர் சூர்யா கடைசியாக நடித்த திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பிளி ஃப்ளை டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்த்துள்ளார்.

பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன், தொடர்ந்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்றதோடு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படம் உலகளவில் தமிழ் சினிமாவை பறைசாற்றியது. மீண்டும் தனுஷுடன் இணைந்து வடசென்னை & அசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் திரை உலகின் ஆகச் சிறந்த இயக்குனராக திகழ்கிறார்.

அசுரன் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரித்திருந்தார். அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் மீண்டும் வெற்றிமாறனுடன் வாடிவாசல் திரைப்படத்தில் இணைந்துள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெகுநாட்களாக வாடிவாசல் படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியானது. கலைப்புலி.எஸ்.தாணு தனது ட்விட்டர் பக்கத்தில், நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் என பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை கிளப்பும் வாடிவாசல் படத்தின் டைட்டிலுக்கை கீழே உள்ள லிங்க்கில் காணலாம்.