தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் சிம்பிளி ஃப்ளை டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டது.

சூரரைப்போற்று படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க நிக்கேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்தார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

வழக்கமான பயோபிக் படங்களில் இருந்து விலகி விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடியான காட்சி அமைப்புகள், எழுச்சியான வசனங்கள் என ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனர் சுதா கொங்கரா பட்டை தீட்டிய சூரரைப்போற்று திரைப்படம் சர்வதேச அரங்கில் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. குறிப்பாக ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்தது.

இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவின் தனியார் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப், நடிகர் சூர்யாவை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதில், கடைசியாக சூரரைப்போற்று திரைப்படம் பார்த்ததாகவும், சூர்யாவின் நடிப்பு சூரரைப்போற்று திரைப்படத்தில் மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பேசியுள்ள கிச்சா சுதீப் மேலும் துளியும் குறை இல்லாமல் தன் கடின உழைப்பால் சிறந்த படைப்பை கொடுத்திருக்கும் நடிகர் சூர்யா கட்டாயம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர்!!! என்றும் புகழ்ந்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யாவை குறித்து கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் பேசியுள்ளது இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.