தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல எடிட்டர்களில் ஒருவர் கோலா பாஸ்கர். பல வெற்றி திரைப்படங்கள் இவரின் எடிட்டிங்கை தாண்டி தான் வந்துள்ளது. இவர் தன் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, விஜய்யின் போக்கிரி, தனுஷின் யாரடி நீ மோகினி, கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, 3, இரண்டாம் உலகம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் எடிட்டராக இருந்தவர். தனது அற்புதமான எடிட்டிங்கால் காட்சிகளின் கச்சிதத்தை உணர்த்தியவர். 

எடிட்டிங் அல்லாது மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை தயாரித்தார். செல்வராகவன் எழுதி, அவரின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்தது. 

கோலா பாஸ்கருக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கோலா பாஸ்கர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8 மணிக்கு உயிர் இழந்தார். இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோலா பாஸ்கர் இறந்த செய்தி அறிந்த ரசிகர்கள், அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

இந்த 2020-ம் ஆண்டில் கொரோனா ஒருபுறமிருக்க, மரண செய்திகள் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நல்ல செய்தி வரவில்லை என்றாலும் பரவாயில்லை, தொடர்ந்து சினிமா துறை சார்ந்தவர்களின் இழப்பு செய்திகள் வருவதில் என்ன நியாயம் என்று புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். 

புற்றுநோய் குணப்படுத்த முடியாத நோய்களில் ஒன்று. கோலா பாஸ்கர் நம்மை விட்டு மறைந்தாலும், அவரது படைப்புகள் மூலம் நம்முடன் இருப்பார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் சினிமா சார்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் திரை ரசிகர்கள்.