மலையாள திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படங்கள் மலையாளத்தை தாண்டி பிற மொழிகளிலும் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்தவகையில் கடைசியாக துல்கர் நடிப்பில் வெளிவந்த குருப் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பாலிவுட்டில் இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகும் சுப்-ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட் எனும் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் துல்கர் சல்மான்,  தெலுங்கில் இயக்குனர் அனு ராகவப்புடி இயக்கத்தில் யுத்தம் ராசினா பிரேம கதா என்னும் திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் வருகிற மார்ச் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகிறது ஹே சினாமிகா திரைப்படம். முன்னணி நடன இயக்குனர் பிரிண்ட முதல் முறை இயக்குனராக களமிறங்கியுள்ள ஹே சினாமிகா திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து காஜல் அகர்வால் & அதிதி ராவ் ஹைடாரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ், குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & வயகாம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ஹே சினாமிகா படத்திற்கு பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். முன்னதாக இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாடலாக மேகம் பாடல் வீடியோ தற்போது வெளியானது. அந்த பாடல் வீடியோ இதோ…