நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலகை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகபாபுவுக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின்படி அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.

தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது குறித்து நாகபாபு சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அனைத்து இன்ஃபெக்ஷன்களும் துன்பம் இல்லை. அதை சக மனிதர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடியும். எனக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தாண்டி வந்து பிளாஸ்மா தானம் அளிப்பேன். கோவிட் பாசிட்டிவை எதிர்த்து போராட பாசிட்டிவாக இருக்கிறேன் என்றார்.

நாகபாபுவின் பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலரும் நாகபாபுவுக்கு தைரியம் சொல்லியுள்ளனர். இவர் துணை கதாபாத்திரங்கள் மற்றும் வில்லனாக நடிப்பதற்கு பெயர் போனவர். அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். நாகபாபு தன் தம்பியும், நடிகருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் சேர்ந்து கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்களில் நடிப்பது தவிர்த்து தயாரிக்கவும் செய்கிறார். மேலும் பிற நடிகர்களுக்காக டப்பிங்கும் பேசி வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக எடைனா ஜரகொச்சு என்ற படம் வெளியானது. நாகபாபுவின் மகளான நிஹாரிகா கொனிடெலாவுக்கும், குண்டூர் ஐஜியின் மகன் சைதன்யாவுக்கும் கடந்த மாதம் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களுக்கு வரும் டிசம்பரம் மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.