தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வரும் கவிஞர் சினேகன் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். குறிப்பாக இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த ராம் திரைப்படத்தில் “ஆராரிராரோ” , சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தின் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” , இயக்குனர் வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தின் “யாத்தே யாத்தே” உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்.

கடைசியாக கவிஞர் சினேகன் எழுதிய பாடல்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த பாடல் என்றால் அது நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் இடம்பெற்ற “காட்டு பயலே”. பாடலாசிரியராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள  கவிஞர் சினேகன் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார். 

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த கவிஞர் சினேகன் கடந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கவிஞர் சினேகன் திருமணம் இன்று உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. 

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் டிவி சீரியல் நடிகையுமான நடிகை கன்னிகா ரவியை கவிஞர் சினேகன் இன்று திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கவிஞர் சினேகன் - நடிகை கன்னிகா ரவி திருமண புகைப்படங்கள் இதோ...