கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. வைரஸை கட்டுப்படுத்த சானிடைசர், முகக்கவசம், தனி மனித இடைவெளி, தடுப்பூசிகள் என எத்தனை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்தபோதும் தற்போதும் உலகம் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்நோக்கி நிற்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக இரண்டாம் அலையின் போது தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையும் அதில் ஒரு சிலர் உயிரிழந்ததையும் நாம் பார்த்தோம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் ,இயக்குனர் தாமிரா, நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் நடிகர் மாறன் உள்ளிட்ட பலர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். அந்த வகையில் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளரும் பிரபல தமிழ் நடிகையுமான ஷெரின் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் அனைவருக்கும் தெரிவித்துள்ளார். 

அந்த வீடியோவில் “பெரிய அளவில் எந்த அறிகுறிகளும் தென்படாத நிலையிலும் பரிசோதனை மேற்கொண்ட நடிகை ஷெரினுக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது எனவும், கடந்த மூன்று நான்கு நாட்களில் பாண்டிச்சேரியிலும் விமான நிலையத்திலும் தன்னை சந்தித்தவர்களும் தன்னோடு இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டவர்களும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படியும் முடிந்தவரை தனிமையில் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்”. தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது குறித்து நடிகை ஷெரின் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.