தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார்.

தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, சீயான் விக்ரமுடன் சாமி 2, இயக்குனர் மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம், இயக்குனர் வெற்றிமாறனின் வட சென்னை, சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை  உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியானார். மேலும் கனா, க/பே ரணசிங்கம் என கதாநாயகிகளை முன்னிறுத்தும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் .

அடுத்ததாக மலையாளத்தில் பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், தி கிரேட் இந்தியன் கிட்சன் எனும் மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்காக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் ரேடியோ ஜாக்கியுமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் திட்டம் இரண்டு.  சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் மினி ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் திட்டம் இரண்டு திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது. கிரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் திட்டம் இரண்டு திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.