தமிழ் திரை உலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் பசுபதி. எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம்மை மகிழ்விக்கும் மகத்தான கலைஞன். ஆனால் இன்னமும் திரையுலகம் இவரை முழுவதுமாக பயன்படுத்தவில்லையோ என்ற எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் நிலவுவது உண்டு.

உலக நாயகன் கமல்ஹாசனின் விருமாண்டி எனும் மாபெரும் படைப்பின் ஒரு பெரிய தூணாக கொத்தாளத் தேவர் கதாபாத்திரத்தில் நடித்த பசுபதியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. சீயான் விக்ரமின் தூள் படத்தில் வரும் ஆதி, விஜய்யின் திருப்பாச்சி படத்தில் வரும் பட்டாசு பாலு, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஈ படத்தில் வரும் நெல்லை மணி என அந்தக் கதாபாத்திரங்களை ஆழமாக நம் மனதில் பதிய வைத்த தேர்ந்த நடிகர் பசுபதி.

கடைசியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி, ரங்கன் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டினார். இந்நிலையில் நடிகர் பசுபதி நடிக்கும் அடுத்த திரைப்படம் பூஜையோடு இன்று தொடங்கியது. இயக்குனர் ராம் சங்கையா இப்படத்தை இயக்குகிறார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்தில் பசுபதி உடன் இணைந்து நடிகை ரோகினி மற்றும் அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி.கே.எஸ் இசையமைக்கிறார். இன்று பூஜையோடு தொடங்கிய இப்படத்திற்கான பாடல் பதிவும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.