காதல் திருமணம் செய்து கொண்ட 20 நாளில் மனைவி தாலியைக் கழட்டியதால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு புதுமண தம்பதியினர் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், கணவன் உயிரிழந்துள்ளதால், மனைவி மருத்துவமனையில் தீவிரமாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஜீவா நகரை சேர்ந்த விஷ்ணு, குறும்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். 

விஷ்ணுவுக்கு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாலினி என்பவரின் அறிமுகம் கிடைத்து உள்ளது. இதனால், அவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். 

அதன் படி, இருவரும் தங்களது வீட்டில் தங்களது காதலைப் பற்றித் தெரிவித்து இருக்கிறார்கள். அதன் படி, இரு வீட்டார் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து. 

தங்களது திருமண வாழ்க்கையை அவர்கள் இன்முகத்துடன், மிகவும் மகிழ்ச்சியாகவே தொடங்கி உள்ளனர். ஆனால், திருமணமாகி ஒரு சில நாட்களில் அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது,

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இருவருக்கும் நேற்று முன் தினம் மீண்டும் பிரச்சனை எழுந்து உள்ளது. அப்போது ஏற்பட்ட சண்டையில், கடும் ஆத்திரம் அடைந்த மனைவி சாலினி, கணவன் கண் முன்னே தான் அணிந்திருந்த தாலியை கழற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. 

தன் காதல் மனைவியின் செயலை சற்றும் எதிர்பார்க்காத கணவன் விஷ்ணு, கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால், கடும் கோபம் அடைந்த அவர் வேகமாகத் தனது அறைக்கு சென்று உள் பக்கமாகக் கதவை பூட்டி உள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு விஷ்ணு தூக்கிட்டு பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அதிகாரிகள் வருவதற்குள், கணவர் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்த சாலினி வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, தன்னைத் தானே கழுத்தை அறுத்துக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதில், கழுத்து அறுபட்ட சாலினியை உறவினர்கள் உடனடியாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“கணவன் விஷ்ணுவுக்கும் - மனைவி சாலினிக்கும் எதன் காரணமாக, அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது” என்று, தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலினி தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், போலீசார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சாலினி கண் வழித்தால் மட்டுமே அதற்கான காரணம் தெரிய வரும் என்று, போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.