கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் நிலை என்ன என்பது தெரியாததால், அவர்களது குடும்பத்தினர் கலங்கிப் போய் உள்ளனர்.

வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர நிவர் புயலானது, அதன் ஆரம்பப் பகுதியான புதுச்சேரி - மரக்காணம் இடையே இரவு 11.30 மணிக்கு மேல் கரையை கடக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, புயலின் மையப் பகுதியானது, நள்ளிரவு நேரத்தில் கரையை கடக்கத் தொடங்கியது. 

குறிப்பாக, அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய நிவர் புயலானது, தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. 

நிவர் புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட அங்குள்ள சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரையில் பலத்த காற்றும், கன மழையும் கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து, நிவர் புயல் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நிவர் புயலை முன்னிட்டு, கடலுக்கு யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. அதே நேரத்தில், புயல் எச்சரிக்கை விடுக்கும் முன்பே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள், கரைக்கு திரும்பும் படியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன் படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலரும், புயல் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய நிலையில், இன்னும் பலர் ஊர் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதில், சிலரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்றும், மீனவர்கள் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, “நேற்று முன் தினம் மாலை வரை 10 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்றும், காரைக்கால் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், காரைக்கால் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் ஆர்.கவியரசன் விடுத்துள்ள அறிக்கையில், “காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 192 மீன் பிடி விசைப் படகுகளில், 102 படகுகள் பாதுகாப்பாகக் காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளன” என்று, குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், “67 மீன் பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றடைந்து விட்டது என்றும், 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது” என்றும், கூறியிருந்தார்.

மேலும், “7 படகுகள் ஆங்காங்கே கரை திரும்பிய நிலையில், மீதமுள்ள 16 படகுகளில் 14 படகுகள் காரைக்கால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்றும், எஞ்சிய 2 படகுகளில் சென்ற 32 மீனவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை” என்றும், அவர் தெரிவித்திருந்தார். 

இதனால், 32 மீனவர்களின் கதி என்ன என்று தெரியாமல், அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அத்துடன், கடலுக்குச் சென்ற 32 மீனவர்களைப் பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்று, அவர்களது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனால், சக மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில், கரை திரும்பாத மீனர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.