சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியில், கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தக ரீதியாக பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி, பெரு நிறுவனங்கள் துறைக்கும் கடன் வழங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது.

வாராக் கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியிருக்கிறது. இவ்வங்கியின் நிலையான வைப்புத் தொகை ரூ.31,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாகக் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய ரிசர்வ் வங்கி. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது. இந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.

கடந்த சில வருடங்களாகவே தொடர் நஷ்டத்தினை மட்டுமே கண்டு வந்த இந்த வங்கி, கடந்த 2019-2020-ம் நிதியாண்டில் பெருத்த நஷ்டத்தையே கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2015 முதல் லாபத்தில் இருந்து வந்த நிலையில் 2018 மற்றும் 2019-ல் பெரும் நஷ்டத்தை மட்டுமே கண்டது. இதனால் ஜூலை 2017-ல் 189 ரூபாயாக இருந்த பங்கின் விலை, இன்று வெறும் 15.55 ரூபாயாக மட்டும் உள்ளது.

குறிப்பாக வட்டி வருவாயும் தொடர்ந்து இந்த வங்கியில் குறைந்து கொண்டே வந்தது. குறிப்பாக கடந்த ஜூன் 2018-ல் 726.99 கோடி ரூபாயாக இருந்த வருவாய், ஜூன் 2019-ல் 623.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே மார்ச் 2015-ல் 230.15 கோடி ரூபாயாக இருந்த செலவினம், மார்ச் 2019-ல் 401 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் மற்ற வருவாய்களும் இந்த சமயத்தில் வெகுவாக குறைந்துள்ளன.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி தரப்பில் வெளியிட்ட செய்தியில், ``லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை. வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி அளிப்பதற்கு வங்கியில் பணம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று (நவம்பர் 25) லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை இன்று புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 

லஷ்மி விலாஸ் வங்கி கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கரூா் மாவட்டத்தில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு உள்ளவா்களுக்கு நிதித் தேவையை பூா்த்தி செய்து வந்தது. லஷ்மி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.397 கோடி வருவாய் இழப்பை அந்த வங்கி சந்தித்தது. இதனைத் தொடர்ந்து கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள லஷ்மி விலாஸ் வங்கியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

மேலும் லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்நிலையில் புதன்கிழமை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூர் வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.