பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு, மொத்தம் 9 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடுகின்றனர்.

இந்த போட்டியில் 5 வது நாளான நேற்றைய தினம் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் சி4 பிரிவில், நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதி விளையாடினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், மிகவும் கலக்கலாக விளையாடி பவினாபென் பட்டேல் போட்டியின் 34 வது நிமிடத்தில் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். 

இது வரை, கடந்த 11 முறை தொடர்ச்சியாக ஜாங் மியாவிடம் தோல்வி கண்டு வந்த பவினாபென் பட்டேல், இந்த முறை அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில், அவரை எதிர்த்து முதல் முறையாக வெற்றி பெற்றார்.

இதன் மூலமாக, குஜராத்தைச் சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல், பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார். அத்துடன், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு சாதனையையும் அவர் படைத்தார். 

இந்த நிலையில் தான், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், பவினாபென் பட்டேல், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவைச் சேர்ந்த ஜோவ் யிங்கை எதிர்கொண்டு விளையாடினார். 

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் சீன வீராங்கனை ஜோவ்யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் பவினாபென் பட்டேல், கடைசி வரை போராடி தோல்வி அடைந்தார். பவினா எவ்வளவு முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இதன் மூலமாக, பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்து உள்ளார்.

இதனிடையே, பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா படேலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 

இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பவினா படேல் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இந்திய அணி மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து உள்ளார். அவரின் அசாதாரண உறுதியும், திறமையும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளது. இந்த அசாதாரண சாதனைக்கு என் வாழ்த்துக்கள்!” என்று கூறியுள்ளார்.

அதே போல், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பவினா பட்டேல் தனிச் சிறப்புக்குரிய வரலாற்றை படைத்துள்ளார். பவினா பட்டேல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை நாட்டிற்குக் கொண்டு வருகிறார். அதற்காக, எனது வாழ்த்துக்கள். பவினாவின் வெற்றிகரமான வாழ்க்கைப் பயணம் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்” என்றும், அவர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார் பவினாவுக்கு, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.