தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, நேற்று நள்ளிரவில் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கத் தொடங்கிய அதிதீவிர நிவர் புயலானது, தற்போது மேலும் வலுவிழந்துள்ளது. கரையைக் கடந்து, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நகர்ந்து வந்த தீவிர நிவர் புயல், புயலாக வலுவிழந்து, தொடர்ந்து வழக்கு - வடமேற்காக நகர்ந்து வருகிறது.

இது புதுச்சேரியிலிருந்து  85 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 95 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னர் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக ராணிப்பேட்டையின் சோளிங்கரில் காலை 7 மணி முதல் 11 மணி வரை 8.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்குப் பகுதியில் அதிதீவிரப் புயலாக மாறி 16 கி.மீ. வேகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு கரையை கடந்தது. அதி தீவிர நிவர் புயல் கரையை கடக்கும்போது  புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் அதிகனமழை பெய்தது.

அதிகாலை 3.30 மணியளவில் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. அப்போது 120 முதல் 140 கி.மீ. வரை காற்று வீசியது. நிவர் புயலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்திருந்தன. உதாரணத்துக்கு, நிவர் புயலால் பாதிப்புக்குளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மீட்புப் படையின் 15 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி கடலூருக்கு கடந்த 22ம் தேதி 6 குழுக்களும், சென்னைக்கு 2 குழுக்களும், 23-ம் தேதி நாகப்பட்டினத்திற்கு 2 குழுவும் ,விழப்புரத்திற்கு 3 குழுவும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 24-ம் தேதி செங்கல்பட்டுமாவட்டத்திற்கு 2 தேசிய மீட்பு படையினர் என மொத்தம் 15 குழுக்கள் சென்னை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன

இதை தொடந்து நிவர்புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நேற்று இந்திய ராணுவத்தின் 8 குழுக்கள், இரணளுடன் சென்னை வந்தடைந்தனர். மேலும் 6 குழுக்கள் ஒரு படகுடன் திருச்சியில் முகாமிட்டனர்.

இப்படியாக நிவர் புயல் கரையைக் கடந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களுக்கும், ராயலசீமாவுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழையும், அதி கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்ராயலசீமா பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஒருவழியாக தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நிவர் புயல் நள்ளிரவு கரையை கடந்த நிலையில், அடுத்து தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது உருவாகவுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாக தெரிகிறது. தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி அருகில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவ.29-ஆம் தேதி உருவாகவுள்ளது என்றும், இது மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகத்துக்கு மழை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தகவல் வெளிவருகின்றன.