நிவர் புயலின் கோரத்தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் நேற்று பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

தெற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்றிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. நிவர் புயல் அதிதீவிரப் புயலாக கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது. புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை  வழங்குவதிலும்  மீட்புக் குழுவினர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

அதன் ஒருபகுதியாக, கடலூர் மாவட்டம், ரெட்டி சாவடி குமாரமங்கலத்தில் 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி விளக்கினார். 

கடலூரில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தும், வீட்டின் மேற்கூரைகள் பறந்தும், மின்கம்பங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. புயல் அதிகாலையில் கரையை கடந்த நிலையில், பாதிப்பு தொடர்பான நிலவரங்கள் காலை முதல் வந்த வண்ணம் உள்ளன.  

அதைத் தொடர்ந்து, தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது முதல்வருடன் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். 

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் சென்றுள்ளார். ​இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கடலூர் சென்று பார்வையிட்டார். அங்கு புயல் பாதிப்புகளை பார்வையிடும் முதலமைச்சர், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

கடலூரில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்வதால் தண்ணீர் தேங்கி உள்ளது. மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்தார்.