தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


விடுமுறை மற்றும் நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். 


இதனிடையே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது. இளவரசி 5 நாள் பரோலில் வந்ததைக் கழித்தால் பொங்கலுக்கு முன்பு விடுதலை ஆவதற்கான‌ வாய்ப்புகளும், சுதாகரன் சுமார் 4 மாதம் காலம் சிறையிலிருந்ததைக் கழித்தால் இந்த மாதத்திலும் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது.

சுதாகரன் அபராத தொகை கட்டியது தாமதமானதால் அவரது விடுதலை தாமதமாக ஜனவரி முதல் வாரத்தில் இருக்கும் என்கிறார்கள். சொத்து வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு அளித்து இருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதனால்  சசிகலாவுக்கு முன்பாக சுதாகரன், இளவரசி விடுதலை ஆகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.