தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ், மாநில குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த முருகேஷ் என்பவர், “தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து” தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதற்கு, தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர், மாநில குற்ற ஆவணக் காப்பகம் அளித்துள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், “தமிழகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாகக் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டு உள்ளது.

இதில், “கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கு எதிராக 2 பாலியல் வழக்குகள் பதிவு” செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, “கடந்த 2007 ஆம் ஆண்டு மற்றும் 2008 ஆம் ஆண்டில் தலா ஒரு வழக்கும், கடந்த 2010 ஆண்டில் 3 வழக்குகளும் பதிவாகி” உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தலா 4 வழக்குகளும், அதன் தொடர்ச்சியாக 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தலா 16 வழக்குகளும் பதிவாகி உள்ளதாகவும்” கூறியுள்ளது 

“கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த வழக்கின் எண்ணிக்கையானது 19 ஆக உயர்ந்தது. 2016 ஆம் ஆண்டு 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு சற்று குறைந்து 15 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்திருக்கின்றன. 

“கடந்த 2018 ஆம் ஆண்டு சற்று அதிகரித்து 25 வழக்குகளும், 2019 ஆம் ஆண்டு மேலும் அதிகரித்து 35 வழக்குகளும் பதிவாகி” உள்ளன.

இதனால், தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் வன்முறையும், மாணவர்கள் மீதான துன்புறுத்தலும் அதிகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, “தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் எண்ணிக்கையும், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கையும் 

அதிகரித்து உள்ளதோடு, தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும்” தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

அதே நேரத்தில், பள்ளிகளைத் தவிர்த்து வெளியே சமூக வீதிகளில் “கடந்த 2004 ஆம் ஆண்டு 116 ஆக இருந்த சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 410 ஆக அதிகரித்து இருப்பது” தெரிய வந்துள்ளது.

முக்கியமாக, “கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதை” மாநில குற்ற ஆவண பதிவேட்டில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அதிர்ச்சிக்கரமான உண்மை தெரிய வந்துள்ளது.

இதனிடையே, பள்ளிகளில் பயிலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.