தமிழகத்தில் நாளை முதல் (அக்.16) முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் அ.அன்பழகன் இன்று தெரிவித்தாா். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது.

பின்னா், ஜூன் மாதம் மண்டல வாரியாக பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்த போதிலும், ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என அதன் உரிமையாளா்கள் தெரிவித்தனா். காரணம், வெகுதூரம் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை மண்டலங்களுக்குள் இயக்குவதில் அவா்களுக்கு சிக்கல் இருந்தது.

தொடா்ந்து தமிழகம் முழுவதும் எந்தவித கட்டுப்பாடுமின்றி, போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் அழுத்தம் கொடுத்த நிலையில், கடந்த மாதம் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. ஆனால், இயங்காத பேருந்துகளுக்கு அரசு சாலை வரி செலுத்த நிா்பந்தித்ததால், ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளா்கள் மறுத்து விட்டனா்.

சாலை வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என அவா்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனா். பேருந்து உரிமையாளா்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, 6 மாத காலத்துக்கு சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடர்பாக அனைத்துஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறும்போது, ‘‘கொரோனா ஊரடங்கால் கடந்த 5மாதங்களுக்கும் மேலாக ஆம்னிபேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்யவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தினோம். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. ஆம்னி பேருந்துகளைஇயக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே, பண்டிகை நாட்கள் நெருங்கவுள்ளதால், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு வரும் 16-ம் தேதி முதல் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளைப் பின்பற்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்’’என்றார்.

ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் தான் பொதுப் போக்குவரத்து குறித்த அறிவிப்பினை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.