“தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை” என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்து உள்ளார். 

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை, கடந்த ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அப்போது, தமிழகத்தில் உள்ள முக்கிய ஊர்களை புதிய மாவட்டமாகப் பிரித்து, கிட்டதட்ட தமிழகத்தில் மொத்தம் 50 மாவட்டங்களை உருவாக்கத் திட்டம் உள்ளதாகவும், தமிழகத்தின் தலைநகர் சென்னையை யூனியன் பிரதேசமாகப் பிரிக்கவும் அரசுக்குத் திட்டம் உள்ளதாகவும் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதன் தொடர்ச்சியாக, புதிதாக மத்திய அமைச்சராகப் பதவியேற்ற தமிழக பாஜக முன்னால் தலைவர் எல். முருகன், தனது பயோடேட்டாவில், அவரது மாவட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக,“ கொங்கு நாடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தார். இது, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதங்களைக் கிளப்பியதோடு, பேசும் பொருளாகவும் மாறியது.

அதாவது, தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள் இணைந்த பகுதியாகக் கொங்கு மண்டலம் என்று, பேச்சுவாக்கில் அழைக்கப்படுகிறது. ஆனால், அதையே, “கொங்கு நாடு” என்று குறிப்பிட்டு, தனது பயோடேட்டாவில் எல். முருகன், விவரக் குறிப்பு இடம் பெற்றிருந்ததால், அது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த பெரும் சர்ச்சைக்கு மத்திய அரசு சார்பில் யாரும் பதில் அளிக்காத நிலையில், சில நாட்கள் சென்ற நிலையில், இது குறித்து எல். முருகன் தனது விளக்கத்தை அளித்தார். 

அப்போது, “கொங்கு நாடு என்ற வார்த்தை வேண்டும் என்றே போடப்பட்டது கிடையாது என்றும், டைப்பிங் மிஸ்டேக் காரணமாக அவர் ஒரு வார்த்தை இடம் பெற்று இருந்தது” என்றும், அவர் விளக்கம் அளித்தார். 

ஒரு வழியாக, தமிழகத்தில் நீண்ட நாட்கள் நிலவி வந்த பெரும் சர்ச்சைக்குச் சம்மந்தப்பட்ட எல். முருகனே பதில் அளித்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்கள் மட்டும் அவ்வப்போது நடந்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் எஸ்.ராமலிங்கம், பாரிவேந்தர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாகக் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்தார்.

அதில் “தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் தற்போதும் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என்று, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உறுதிப்படத் தெரிவித்தார்.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலவி வந்த கொங்கு நாட்டு சர்ச்சைக்கு, மத்தி அரசு தற்போது தெளிவான ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.