காதல் தோல்வி காரணமாக, தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை தர்மபுரி கலைமகள் நகரை சேர்ந்த 22 வயதான ரஞ்சனி, பி.ஏ. படித்துவிட்டு, அய்யங்குட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 

love Failure.. suicide of school teacher

இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை ரஞ்சனி, கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். 

இந்த காதல் விவகாரம், ரஞ்சனி வீட்டில் தெரியவரவே, அவரது பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ரஞ்சனி, தனது காதலனுக்கு போன் செய்து, தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதாகத் தெரிகிறது.

இதனால், கொஞ்சம் யோசித்த அந்த காதலன், ரஞ்சனியின் தம்பி விக்னேசுக்கு போன் செய்து, “உன் அக்காவை திருமணம் செய்துகொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, ரஞ்சனியின் தம்பி விக்னேஷ், காதலன் சொன்ன தகவலைத் தனது பெற்றோர் மற்றும் தனது அக்காவிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக, கடும் மன உளைச்சலில் காணப்பட்ட ரஞ்சனி, வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார். 

love Failure.. suicide of school teacher

இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி இரவு தனது அறையில் தூங்க சென்ற ரஞ்சனி, மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி உள்ளார். 

இதைப்பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அவரை மீட்டு அங்குள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி தற்போது அவர் உயிரிழந்துள்ளார். 

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ரஞ்சனி காதல் தோல்வி காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.