கள்ளக்குறிச்சி அருகே கழுத்தில் தாலி இருந்த நிலையில், காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கவிதாவும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள ராம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 20 வயதான பாஸ் குமாரும், ஆத்தூர் அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் இளங்கலை  ஆம் ஆண்டு படித்து வந்தனர். இதனால், அவர்களுக்கு இடையில் நல்ல பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இதனால், ஒருவரை ஒருவர் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். 

காதலர்கள் இருவரும் தங்கள் காதலை தங்கள் வீட்டில் கூறியதாகவும், ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் காலை வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற பாஸ்குமார் இரவு வரை வீடு திரும்ப வில்லை. இதனால், அவரை அவரது பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர் எனப் பலருக்கும் போன் செய்து பார்த்தும் இவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

அதேபோல், நேற்று மாலை முதல் வீட்டிலிருந்து வெளியே சென்ற கவிதாவும் அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. இதனால் கவிதாவின் பெற்றோரும், மகளைக் காணவில்லை என்று, அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். 

இதனையடுத்து, அங்குள்ள ஈரியூர் காட்டு கொட்டாய் வனப் பகுதியை ஒட்டியுள்ள அருஞ்சோலை அம்மன் கோயிலில் காதல் ஜோடி இருவரும் ஒன்றாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து, அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்த வந்த கீழ்குப்பம் போலீசார், இருவரின் உடலை மீட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கிறதா என்று பார்த்துள்ளனர். 

அப்போது, சடலமாகத் தொங்கிய கவிதாவின் கழுத்தில் தாலி இருந்துள்ளது. அவற்றைப் புகைப்படம் எடுத்துக்கொண்ட போலீசார், வேறு எதுவும் தடயங்கள் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தனர். அத்துடன், இருவரின் உடல்களையும், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், “காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் எதிர்ப்பு காரணமாகத் தற்கொலை செய்திருக்கலாம்” என்று சந்தேகப்படுவதாகத் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், உயிரிழந்த கவிதாவின் கழுத்தில் தாலி இருந்ததால், இருவரும் தற்கொலை செய்துகொள்ளும் முன், காதலன் பாஸ்குமார் காதலி கவிதாவின் கழுத்தில் தாலி கட்டினாரா? அல்லது இருவரும் திருமணம் செய்துகொண்டதால், அவர்கள் கொலை செய்யப்பட்டு, தூக்கில் ஏற்றப்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், முழு தகவலும் தெரிய வரும் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது,