நேற்றைய தினம், தமிழகத்துக்கு மிகவும் சோகமான ஒரு நாள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு, தொடர் 3 மாணவ தற்கொலைகள். அனைவருமே, நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள். நீட் அச்சத்தில், தேர்வை எதிர்கொள்ள முடியாமல் இப்படியொரு தவறான முடிவை எதிர்கொண்டுவிட்டனர் மூவரும்.

இவர்களில், நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் மோதிலால் குடும்பத்திற்கு அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ``மருத்துவம் மட்டும் தான் வாழ்க்கை என மாணவர்கள் இருக்க கூடாது, எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன, அவற்றில் சேரலாம். மேலும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிதியுதவி கொடுப்பது குறித்து ஆலோசனை செய்வதாகவும், நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை, அதற்காக போராடுகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் மையத்தினர் சார்பில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

``நீட் தேர்வை ரத்து செய்வதே அரசின் கொள்கை என மாநில அரசு அறிக்கை விடுவதன் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பொய்யான நம்பிக்கையை வித்திட்டு வருகிறது.

ஏனெனில் கல்வி பொதுப் பட்டியலில் உள்ள நிலையில் மாநில அரசுக்கு கல்வியில் ஒரு மாற்றமும் கொண்டு வரும் அதிகாரம் கிடையாது என்பதே உண்மை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால் மட்டுமே மாநில அரசு உரிய மாற்றத்தை செயல்படுத்தும் அதிகாரத்தை பெற்று தமிழக மாணவர்களின் நலனை காக்க முடியும்.

நீட் விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் அனிதாவில் தொடங்கி இதுவரை 16 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். மாநில அரசு மாற்று வழியினைச் சிந்தித்து துரிதமாக செயல்பட வேண்டும்.

பேரிடர் தொற்று காலத்தில் பல மாநில அரசுகளும், சர்வதேசளவிலும் நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், தேசியத் தேர்வு முகமை தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்தது யாருக்காக?

நீதிமன்றங்கள் கைவிட்ட நிலையில், மாணவர்களின் கழுத்தை நெறிக்கும் திட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் செயல்பட முடியும். மேலும் வலிமையான எதிர்ப்புகளை தெரிவிக்காத வரை இப்படுகொலைகள் தொடரும் என்பதால் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்தில் ஏற்கனவே சாதிரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் உறுதிப்படுத்தி நீடிக்கச் செய்யும் நீட் தேர்வு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டு விரைந்து செயலில் இறங்க வேண்டும் என மாநில அரசை தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது" 

எனக்கூறப்பட்டுள்ளது.