தமிழகத்தில் மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்பட்டு வருவதாகவும், “இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக” பாதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி அதிகாரி பாலமுருகன் குற்றம்சாட்டி உள்ள நிலையில், உச்சக்கட்ட இந்தி திணிப்பில் தமிழகம் சிக்கித் தவித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வேத் துறை, அஞ்சல் துறை, பி.எச்.இ.எல். நெய்வேலி அனல் மின் நிலையம்; திருச்சி, ஆவடி, அரவங்காடு போன்ற இடங்களிலுள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற மத்திய அரசின் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் முதலியவற்றிலும், இந்திய அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வட மாநிலத்தவர்களை வேலையில் சேர்த்து வருகிறது. 

சொந்தத் தாய் மண்ணிலேயே வேலைக்குத் தகுதியான தமிழர்கள் ஏதிலிகள் (Refugees) போல் ஒதுக்கி வைக்கப்பட்டு, மேற்கண்ட நிறுவனங்களில் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதுதல், வினாவிடைத் தாள்களை முன்பே வெளியில் பெற்று தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு மோசடிகள் வட நாட்டுத் தேர்வு மையங்களில் நடந்து வருகின்றன என்று, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த 2019 இல் தமிழ்நாடு ரயில்வே துறையில் பழகுநர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100 க்கு 95 விழுக்காட்டினர் வட மாநிலத்தவர்களாக இருந்தார்கள் என்றும், அதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு விதிமுறைகள் மாறப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், அண்மையில் திருச்சி தென்னக ரயில்வே துறை பணிக்குச் சேர்க்கப்பட்ட 3,218 பேரில் மிகப்பெரும்பாலோர் இந்திக்காரர்களும், மற்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆவர். 

இதில் பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் சேர்க்கப்பட்ட 541 பேரில் 400க்கும் மேற்பட்டோர் இந்திக்காரர்களே. தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது. அது தொடர்பான போராட்டமும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் “ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஆர்.டி.ஐ. இந்தியில் பதில் அளித்துள்ள சம்பவமும்” நிகழ்ந்தது. இதன் மூலம், கேள்வி கேட்டவர்களைக் குழப்பவா? இந்தியை வளர்க்கவா?? தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவா? என்றும் பல்வேறு சர்ச்சைகளை வெடித்தன.

மேலும், தற்போது மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் இந்தி சேர்க்கப்பட்டு மும்மொழி கொள்கை அறிவிக்கப்பட்டதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழகத்தில் இருமொழி கொள்கையைத் தமிழக அரசு கடைப்பிடிக்கும்” என்றும், தமிழக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், “இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” என்று, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். 

ஆனாலும், தமிழகம் முழுவதும் இந்தி மொழி, புகுத்தப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. குறிப்பாக, நெடுஞ்சாலையின் ஓரம் தமிழகத்தின் பல இடங்களில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம் பெற்றன. அத்துடன், ரயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசு அரசின் பல்வேறு துரையில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம் பெற்று வந்தன. இதனால், கடும் அதிர்ப்தி அடைந்த தமிழர்கள் தங்களது எதிர்வினையை ஆற்றத் தொடங்கினர். இதனால், இந்த இந்தி எதிர்ப்பு விவகாரம் பூதாகாரமானது.

இதன் காரணமாக, “#ஹிந்திதெரியாதுபோடா” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது. இதனால், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்வினையாற்றி வந்தனர்.

இந்நிலையில், உச்சக்கட்டமாக, தமிழகத்தில் மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்பட்டு வருவதாகப் பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை ஜி.எஸ்.டி அதிகாரி பாலமுருகன், “எனக்குத் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மட்டும் தான் தெரியும் என்றும், என்னைப் பற்றிய முழு விபரமும் என்னைப் பற்றிய குறிப்பில் இடம் பெற்றிருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “எனக்கு இந்தி தெரியாது என தெரிந்த பின் தான், எனக்கு இந்தி பிரிவில் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் இந்தி தெரிந்தவர்களைத் தமிழ் பிரிவுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும்” சென்னை ஜி.எஸ்.டி உதவி ஆணையர் பாலமுருகன் குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “இதுவும் மறைமுகமான இந்தி திணிப்பு தான்” என்றும், உதவி ஆணையர் பாலமுருகன் குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாக, உச்சக்கட்ட இந்தி திணிப்பில் தமிழகம் தற்போது சிக்கித் தவித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.