இ-பாஸ் வழங்க லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சி.எம்.சிவபாபு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக 8 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்திருந்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்த இந்த மாணவிகளை மீண்டும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலையிலிருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு மாணவிகள் இ-பாஸ் இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டது நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.  இந்த மில்லில் வேலை செய்த பள்ளி மாணவர்களிடம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் பேசினர். 

இதையடுத்து, இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் முறையாக விண்ணப்பிப்பவர்களால் இ-பாஸ் பெறமுடியாத நிலையில், புரோக்கர்கள் மூலம் 500 முதல் 2,000 ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள் இ-பாஸ் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு, தொழிலாளர் துறை உதவி கமிஷனர், குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் அனைவரும் கூட்டாக அவினாசியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் சோதனை நடத்தி உள்ளனர். அங்கு இருந்த 331 தொழிலாளர்களில், 133 பேர் 14 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 
இவர்களில் சிலர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள். அவர்களில் சிலருக்கு தேர்வு முடிவு வெளியானதே தெரியவில்லை.

இதையடுத்து, இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையை அரசு கண்டுகொள்ளாததால், ஊழல் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பணத்துக்காக தங்களது உடலை கூனி குனிந்து முறைகேடாக இ-பாஸ் வழங்குகின்றனர். இது மோசமான நிகழ்வு ஆகும். ரத்தத்தை குடிக்க தாகத்துடன் அலையும் ஓநாய் போன்ற இந்த அரசு ஊழியர்கள்,  அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், திருப்பூர் தனியார் தொழிற்சாலையில் உள்ள மாணவிகளை மீட்டு அவர்களைக் குழந்தைகள் நல குழுவின் மூலம், பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்களா என்பதை காவல் துறை, தொழில் துறை மற்றும் குழந்தைகள் நலக் குழு கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.