முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், அட்டகாசமான லுக்கில் சைக்கிளிங் செய்த போட்டோஸ் யாவும் இணையத்தில் பெரும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

முதலமைச்சர், மு.க. ஸ்டாலின் பொதுவாகவே, திமுக தலைவராக இருக்கும் போதும் சரி, அதற்கு முன்பும் சரி, அவர் சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த வகையில் தற்போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தனது சைக்கிளிங் பயணத்தை விடாமல் செய்து வருகிறார். 

அந்த சமயங்களில், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்து பொது மக்களுடன் பேசுவதையும், செல்ஃபி எடுப்பதையும் அவர் வாடிக்கையாகக் கொண்டிருப்பார்.

அதாவது, சென்னை நீலாங்கரையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு இருக்கிறது. இங்கு தான், சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் தங்கியிருக்கும் மு.க. ஸ்டாலின், அதிகாலையில் சைக்கிளிங் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். 

சென்னை அடுத்து உள்ள கோவளத்திற்கு முன்பாக இருக்கும் முட்டுக்காடு படகுத்துறை அருகில் உள்ள பாலம் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. 

இந்த பாலத்தின் இரு புறத்திலும் கடல் நீரும், ஆற்று நீரும் சேரும் காட்சி, அந்த வழியாக செல்பவர்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் இயற்கை சூழல் மிகவும் ரம்மியமாக அமைந்திருக்கும். 

சென்னையில் இருந்து அந்த வழியாக செல்பவர்கள் பலரும் காலையும் மாலையும், சூரியன் உதிப்பதையும், மறைவதையும், இந்த பாலத்தில் நின்று பார்த்தால், அவ்வளவு அழகாகத் தெரியும்.

இதன் காரணமாக, அந்த பகுதியில் புகழ்பெற்ற சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு மாணவ - மாணவியர் பலரும் கிழக்கு கடற்கரை சாலையில், அதிகாலை நேரத்தில் சைக்கிளிங் சென்று, உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தான், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக மு.க. ஸ்டாலின், இன்று அதிகாலை நேரத்தில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதனைக்கண்ட பொதுமக்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அருகே சென்ற இளைஞர்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

ஈ.சி.ஆர் சாலையில் இன்று காலை சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அங்கும் பொது மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அவர் பயணம் செய்த இடங்களில், வழி நெடுக போலீசார் பின் தொடர்ந்து பாதுகாப்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.