"ஒரே நாடு-ஒரே தேர்தல்"அதாவது இந்தியாவெங்கும் சட்டமன்றத்திற்கும்-நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல். " ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெறும் விவாத பொருள் அல்ல. அது காலத்தின் தேவை "  என சில தினங்களுக்கு முன்பு, தேர்தல் நடத்து அதிகாரிகள் மத்தியில் காணொலிக் காட்சி மூலம் பேசிய  மோடியின் இந்த புதிய தேர்தல் முறை குறித்தப் பேச்சு நாடெங்கும் பெரும் சர்ச்சையை கிளப்பிகிருக்கிறது. 

One Nation One Poll

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தப் பிறகு , ஜீன்19 அன்று பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் டெல்லியில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் "ஒரே தேர்தல்", குறித்து முதல் முதலாக  விவாதிக்கப்பட்டது. அப்பொழுதே இந்த புதிய தேர்தல் முறை குறித்து பேசினார். 

One Nation One Poll

தற்போது மீண்டும் ஒரு முறை இந்த திட்டம் குறித்து மோடி பேசியிருப்பது நாடெங்கும் பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. 

தற்பொழுது  "ஒரே தேர்தலின்" தேவை என்ன ? என்ற கேள்விக்கு ஆளும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படும் காரணங்களைப் பார்க்கலாம்… 
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் நடக்கின்றன. இத்தேர்தல்களின்போது அமலுக்குவரும் "தேர்தல் நடத்தை விதிமுறைகளின்" காரணமாக மத்திய அரசின் நிர்வாகப் போக்கு பாதிக்கப்படுகிறது என்பது முதன்மைக் காரணம் (இந்த விதிகள் அமலுக்கு வந்தபின், நாடு தழுவிய-அல்லது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் புதிய திட்டங்கள் எதையும் மத்திய-மாநில அரசுகளால் அறிவிக்க இயலாது). 

உதாரணத்திற்கு இப்போதுதான் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மத்திய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில் அடுத்த ஓராண்டுக்குள்  மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா, டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இத்தேர்தல்கள் நடைபெறும் காலகட்டத்தில் மத்திய அரசானது புதிய திட்டங்களை அறிவிக்க இயலாது; பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்களின் பணிகளுக்கு இடையில் தேர்தல் பிரச்சாரத்திற்கும் நேரம் ஒதுக்கவேண்டிவரும். இதனால் வழக்கமான அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும். இது முக்கியக் காரணமாகிறது.

ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும் பொருட்செலவு, "ஒரே தேர்தலின்" காரணமாகக் கணிசமாகக் குறையும் என்பதே இரண்டாவதாக முன்வைக்கப்படும் காரணம்.
( 2019 நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு கிட்டத்தட்ட ரூ.4000 கோடி செலவானது என்பது குறிப்பிடத்தக்கது.)

மறுபக்கம் காங்கிரஸ்,திமுக,திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம், மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற பிரதானக் கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்து "ஒரே தேர்தல்" என்ற கொள்கை தங்களுக்கு உடன்பாடில்லை என்று தொடர்ந்து சொல்லிவருகின்றனர். 

ஏன் இதை எதிர்க்கட்சிகள்  எதிர்க்கின்றன ?

மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்படும்போது அது மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள தேசியக் கட்சிகளுக்குத்தான் சாதகமாக அமையும்; வளர்ந்துவரும் மாநிலக் கட்சிகளுக்கு இது பாதகமாக அமையும் என்பது ஒரு வாதம்.

அதேபோல், மத்திய அரசோ-மாநில அரசோ தனது 5 ஆண்டுக்கால ஆட்சியை முழுமையாக முடிக்காமல் 2 அல்லது 3 ஆண்டுகளில் கலைய நேரிட்டால் மீதியுள்ள ஆண்டுகளுக்கு ஜனாதிபதி அல்லது கவர்னர் ஆட்சி நடக்குமா இல்லை வேறுவழிமுறைகள் பின்பற்றப்படுமா என்பது போன்ற பெரிய குழப்பங்களுக்கு இது வித்திடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

One Nation One Poll

தேர்தல் சீர்திருத்தங்கள் என்ற அடிப்படையில் செய்யவேண்டிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது பா.ஜ.க. இதைக் கையில் எடுப்பது தேவையில்லாதது என்பதோடு அரசியல் சாசனம் உள்ளிட்ட பல சட்டங்களில் பெரும் திருத்தங்களை செய்யக்கோரும் இத்தேர்தல் முறையானது சட்ட ரீதியில் சாத்தியமானதல்ல என்பதும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பிற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.  

இப்படியாக பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகிய இருதரப்பினர் கருத்திலும் சாதக-பாதகங்கள் உள்ளன. "ஒரே தேர்தல்" ஏன் வேண்டும் என்பதற்கும் ஏன் வேண்டாம் என்பதற்குமான வாதப்பிரதிவாதங்கள் மக்கள் மன்றத்தில் விரிவாக விவாதிக்கப்படவேண்டும். எதிர்க்கட்சிகளின் நியாயமான கேள்விகளுக்கு பதில் கிடைக்கப்பெற வேண்டும். உடனடியாக இப்படியொரு தேர்தல்முறை அமலுக்கு வருகிறது என்றால் அதை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது. இப்போதைக்கு இதுவிவாதம் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆகவே, விவாதிப்பதில் தவறில்லை. 

இந்தப் புதிய தேர்தல்முறை குறித்து விரிவாக ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவில் பிரதமர் அறிவித்துள்ளார். இக்குழுவானது எப்போது, எப்படி அமைக்கப்படுகிறது, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்துத்தான் "ஒரே தேர்தல்" குறித்தான கருத்தாக்கம் அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்.

மேலும் இப்பிரச்னையில் பா.ஜ.க.வின் அணுகுமுறை சரியல்ல என்றே கருதவேண்டி இருக்கிறது. காரணம் , ஒரே நாடு  ஒரே தேர்தல் விவகாரத்தைத் தவிர்த்து , தலைநகர் டெல்லியில் புதிய வேளான் திருத்தச் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் நாட்டின் தலைமகன்களாகிய விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவில்லை பாஜக அரசு. அதேப்போல்   வடகிழக்கு பிராந்தியங்களின் வளர்ச்சிகளான விவசாயம் உள்ளிட்ட, வேலைவாய்ப்பு, கல்வி,தண்ணீர் பிரச்னை,இயற்கைவளங்களைப் பாதுகாத்தல் போன்ற பிரச்னைகளை தான் புதிய தேர்தல் முறை விட நாட்டிற்கு தற்பொழுது மிகவும் முதன்மையான பிரச்சனைகள் !