பாலிவுட் திரையுலகின் இளம் நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் அறிவித்து இருந்தனர். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது கொலையா? தற்கொலையா? என்பதை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காதலி ரியா சக்கரவர்த்தி தான் நடிகர் சுஷாந்தை கொன்று விட்டதாகவும், சுஷாந்தின் பணத்தை மோசடி செய்து திருடி உள்ளதாகவும், சுஷாந்தின் அப்பா கே.கே. சிங் பாட்னா போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், ரசிகர்கள், சில மீடியாக்கள் என நடிகை ரியா சக்ரவர்த்தி தொடர்ந்து டார்கெட் செய்து வருகின்றனர். சுமார் 34 மணி நேரத்துக்கும் மேலாக கடந்த 4 நாட்களில் நடிகை ரியா சக்ரவர்த்தியை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

ரியா சக்ரவர்த்தியின் தம்பி செளவிக் சக்ரவர்த்தியிடமும் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இன்று முதன்முறையாக ரியா சக்ரவர்த்தியின் பெற்றோர்களையும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாகவும், நடிகை ரியா சக்கரவர்த்தி டார்கெட் செய்யப்படுவது தொடர்பாகவும், எந்த முன்னணி நடிகர்களும், நடிகைகளும் வாயே திறக்காமல் மெளனம் காத்து வந்தனர். 

சில நாட்களுக்கு முன்பாக நடிகை டாப்ஸி, இந்த விவகாரத்தில், ரியா சக்ரவர்த்தியை டார்கெட் செய்வது தவறான விஷயம் என கூறி இருந்தார். குற்றவாளியாக நடிகை ரியா சக்ரவர்த்தி உறுதி செய்யப்படாத நிலையில், அவரை குற்றவாளியை போல நடத்துவதும், மீடியாக்கள் அவரை இழிவாக பேசுவதும், சித்தரிப்பதும் தவறான விஷயம் என்றும், நடிகை ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவு கரம் நீட்ட மீடியா நண்பர்களே விழித்து எழுங்கள் என நடிகை லக்‌ஷ்மி மஞ்சு அதிரடியாக ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

அவரது ட்வீட்டை பார்த்த நடிகை வித்யா பாலன், உண்மைதான். ரியா சக்ரவர்த்தியை மீடியா சர்க்கஸ்க்காக வில்லியாக மாற்றுவதை பார்த்து என் நெஞ்சே வெடிக்கிறது. இந்திய நீதித் துறையின் மீதும், விசாரணை செய்யும் அதிகாரிகள் மீதும் தனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர்கள் நிச்சயம் சுஷாந்த் மரணம் தொடர்பான உண்மையை கண்டறிவார்கள், அதற்குள் நீங்களே தீர்ப்பு எழுதி விடாதீர்கள் என கொதித்தெழுந்து பதிவு செய்துள்ளார் நடிகை வித்யா பாலன். 

வித்யா பாலனின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் சகுந்தலா தேவி. கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமான இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. கணிதத்தில் அவரது திறனும் ஆளுமையும் 1982 ஆம் ஆண்டின் தி கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் பதிப்பில் அவருக்கு குறிப்பிடத்தக்க இடத்தை தந்தது. 

சகுந்தலா தேவி படத்திற்கு பிறகு ஷெர்னி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அமித் இந்த படத்தை இயக்கவுள்ளார். கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திலும் அசத்தியிருந்தார் வித்யா பாலன். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார். வினோத் இயக்கிய இந்த படத்தை போனி கபூர் தயாரித்தார். கடந்த ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.