தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாரான நாகார்ஜுனா 1986-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிக்கத்துவங்கினார். 1997-ம் ரட்சகன் படம் மூலம் தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த 2016-ம் ஆண்டு கார்த்தியுடன் தோழா படத்தில் நடித்திருந்தார். இன்று நாகார்ஜூனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் திரை பிரபலங்கள். 

கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ஆபிசர். நாகார்ஜூனா நடிப்பில் வெளியான இந்தப் படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருந்தார். இந்தப் படம் தற்போது தமிழில் டப் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்து. விஜய் மற்றும் நாகார்ஜுனா இருவரும் முறையே கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இரண்டு நடிகர்களும் அவரவர் மாநிலங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.

மேலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதை கொண்டுள்ளனர். ஏற்கனவே நாகார்ஜுனாவின் ஆசாத் படத்தின் தமிழ் ரீமேக்கான வேலாயுதம் என்ற படத்தில் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டு நட்சத்திரங்களுக்கிடையில் இன்னொரு இணைப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நாகார்ஜுனாவின் புதிய தமிழ் படத்திற்கு சிம்டாங்காரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் விஜயின் சர்க்கார் படத்தின் மூலம் பிரபலமானது. சர்க்கார் படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய பல்டி பாக்குற டார்ல வுடனும் பல்த்து... என்ற பாடலில் இடம் பெற்ற வார்த்தைதான் சிம்டாங்காரன்.

சிம்டாங்காரன் என்பது மெட்ராஸ் பாஷை ஆகும். கண்ணை சிமிட்டாமல் பார்க்கும்படி அழகாக உள்ள ஒரு பையனை குறிக்கும் ஒரு சொல்லாகும். இந்த பெயர் நாகார்ஜூனாவுக்கு பக்காவாக பொருந்தும் என்பதால் இப்படத்திற்கு சிம்டாங்காரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு உருவான திரைப்படம் சர்க்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழில் பெரும் ஹிட்டான இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.