கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்றைய முன் தினம் மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பி-ன் மறைவு குறித்து பல திரைப்பிரபலங்கள் பதிவு செய்து வருகின்றனர். இசை ஜாம்பவான் எஸ்.பி.பி-ன் மறைவு செய்தி பட்டி தொட்டியெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

74 வயதாகும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜூன் 4, 1946ல் பிறந்தார். 1966ம் ஆண்டு சினிமாவுக்காக பாடும் பயணத்தை துவங்கினார் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு அவர் ராசியான பாடகராகவும் இருந்திருக்கிறார். 

தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகம் என்றே கூறலாம். எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மறைவு திரை உலக பிரபலங்களை மட்டுமல்ல அரசியல் தலைவர்களை மட்டுமல்ல கோடான கோடி இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

மறைந்த எஸ்.பி.பி உடன் நெருங்கி பழகியவர்கள், இசைத்துறை சார்ந்தவர்கள் அவர் நினைவு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர் குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஹாரிஸ் ஜெயராஜ் கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்திற்கு தான் இசையமைத்து இருந்தார். அடுத்து அவர் கைவசம் கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் எஸ்.பி.பி பற்றி நினைவுகளை பகிர்ந்து கொண்டார் ஹாரிஸ். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, தேவ் திரைப்படத்தின் ரெக்கார்டிங் நடக்கும் போது, எஸ்.பி.பி அவர்கள், அவரின் ட்ரைவரை என்னுடன் சேர்த்து வைத்து, அவரது கைகளாலேயே ஒரு போட்டோவை எடுத்தார். பிறகு அதை ட்ரைவரிடம் கொடுத்து, இப்போ சந்தோஷமா என மகிழ்ச்சியுடன் கேட்டார். அவ்வளவு தன்னடக்கமான மனிதர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்த இந்த விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.