ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்தெந்த தலைவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தற்போது பார்க்கலாம்...

p Chidambaram

“ ப.சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அரசியல் காழ் புணர்வோடு இத்தகைய செயல் நடைபெறுவதாக நான் அறிகிறேன். மேலும், ப.சிதம்பரம் சட்ட வல்லுநர் என்பதால், இந்த வழக்கை அவர் சட்டரீதியாகவே எதிர்கொள்வார். ”

- மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

“ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல, நாட்டின் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக பணியாற்றியவர். சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை பாஜக தலைமையிலான மத்திய அரசு கைவிட வேண்டும். சிபிஐ-யின் இந்த செயல்பாடு, இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.”

- திருமாவளவன், தலைவர், விசிக 

“ப.சிதம்பரம் விதைத்தது விளைந்திருக்கிறது. ப.சிதம்பரம் குற்றம் செய்திருக்கிறார்; மோடி அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.”

- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

“ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. அவர் பொருளாதார குற்றவாளி, தேசவிரோத போல் உருவகப்படுத்த முயற்சிக்கிறார்கள். மத்திய பாஜக அரசு தவறான முன்னுதாரணத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ”

p Chidambaram

- கே.எஸ். அழகிரி மாநிலத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்

“தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டிருப்பது தலைகுனிவுதான். கைது செய்யும் நிகழ்வு வரை கொண்டு சென்றது ப.சிதம்பரம் தான்."

- தமிழிசை சவுந்தரராஜன் தமிழ் மாநிலத் தலைவர், பாஜக

“ ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை மூடிமறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். ”

- கே.பாலகிருஷ்ணன் மாநிலச்செயலாளர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

“பாஜக அரசின் தவறுகளை அம்பலப்படுத்திய சிதம்பரத்தின் கருத்துக்கு, கருத்தாக பதில்கூற முடியாமல் கோழைத்தனமான செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது."

- ஜவாஹிருல்லா தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது, அரசியல் பழிவாங்கும் நோக்கம் மட்டுமின்றி தனிமனித கோபம் உள்ளது. அமித் ஷா கோபத்தால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதில் முழுமையாக அரசியல் உள்ளது. முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நிலையில், கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.”

- டி.கே.எஸ்.இளங்கோவன் தி.மு.க அமைப்புச் செயலாளர்

“ நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர், எப்போதும் நான் குற்றம் செய்தேன் என்று ஒத்துக்கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களையெல்லாம் கண்டு மத்திய அரசு அஞ்சாது."

- ஹெச்.ராஜா தேசிய செயலாளர், பாஜக

“ எந்தவித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் காலத்தில் காங்கிரஸை வழிநடத்தும் அளவிற்குத் தகுதியானவர் ப.சிதம்பரம்.”

- கராத்தே தியாகராஜன், காங்கிரஸ்

p Chidambaram

“பணமதிப்பிழப்பு தொடங்கி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து வரை எனது தந்தை விமர்சித்து வந்தார், அவரை அடக்கி ஒடுக்கவே இந்த கைது நடவடிக்கை. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது, காஷ்மீர் விவகாரத்தைத் திசை திருப்பும் முயற்சி மட்டுமே. இது எனது தந்தையை மட்டுமே குறிவைக்கும் செயல் அல்ல. காங்கிரஸ் கட்சியையும் குறிவைத்துச் செயல்பட்டுள்ளனர். மேலும், யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை. இந்த ஒட்டுமொத்த விஷயமும் அரசியல் பின்புலம் கொண்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு சோடிக்கப்பட்டு எனது தந்தையைக் கைது செய்துள்ளனர்."

- கார்த்திக் சிதம்பரம் எம்.பி., காங்கிரஸ்