ரகிட ரகிட என தியேட்டரில் விசில் அடித்து குத்தாட்டம் போட்டு கொண்டாட வேண்டிய ஜகமே தந்திரம், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓராண்டு கழித்து 17 மொழிகளில் 190 நாடுகளில் இன்று நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது.எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சுருளி -”சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா” ஆனாரா? இல்லையா? இதோ ஒரு அலசல்….

ஒருபுறம் பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்திற்கு தஞ்சம் புகுந்த புலம்பெயர் மக்களை விரட்டியடித்து மொத்த இங்கிலாந்திற்கும் வெள்ளையடிக்க வெறியோடு இருக்கும் பீட்டர், மறுபுறம் புலம்பெயர் மக்களுக்கு அரணாகவும் கடத்தல் மன்னனாகவும் பீட்டருக்கு சிம்மசொப்பனமாகவும் சிவதாஸ், இவர்களுக்கு நடுவில் மதுரையில் பரோட்டா கடை நடத்தி வரும் லோக்கல் ரவுடி சுருளி எப்படி வந்தான்? என்னென்ன சம்பவங்கள் செய்தான்? என்பதே ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலக்கதை.

அகதிகளாக தனியார் சிறைச்சாலைகளில் அவதிப்படுபவர்களை மீட்டெடுத்து உதவும் சிவதாஸ் அதற்குத் தேவையான பணத்திற்காக கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். சிவதாஸ் மற்றும் அவனது கூட்டத்தை தீர்த்துக்கட்ட தமிழ் கேங்ஸ்டரை தேடும் பீட்டருக்கு மதுரை சுருளியின் முகவரி கிடைக்க பரோட்டா கடையில் தன் எதிரிகளை பந்தாடும் சுருளிக்கு, லண்டனுக்கு செல்ல அழைப்பு வருகிறது. கேட்ட டீல் ஓகே ஆனதால் சுருளி  லண்டன் பறக்கிறான். பணத்திற்காக எதையும் செய்யும் சேட்டை பிடித்த கேங்ஸ்டர் ஆன சுருளி நடத்தும் வேட்டை மீதிக்கதை.

படத்திற்கு படம் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம் மனதில் பதிய வைக்கும் தனுஷிற்கு சுருளி அவ்வளவு கடினமான கதாபாத்திரமாக இல்லை. இறங்கி விளையாடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தாம்பூலத்திற்க்கும் தாம்பத்தியத்திற்கு வித்தியாசம் கேட்கும் இடத்தில்  நம் முகத்தில் சிரிப்பையும், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என பேசும் இடத்தில் துரோகத்தின் உச்சிக்கே சென்று வெறுப்பையும்  கொடுக்கிறார். ரகிட ரகிட ரகிட பாடலில் அவர் செய்யும் ரஜினி ஸ்டைலும் சண்டைக் காட்சிகளில் இருக்கும் துடிப்பும் வேகமும் திரையரங்குகளை ஞாபகப்படுத்தி கொஞ்சம் வருந்த வைக்கிறது.

இத்தனை நாளாய் இவரை தமிழ் திரையுலகம் எப்படி விட்டு வைத்தது என ரசிகர்கள் அனைவரையும்  தலையில் தட்டி இருக்கிறார் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்.“துரோகம் நம் இனத்தின் சாபம்” என சொல்லும் இடத்தில் தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் இடம்பிடிக்கிறார்.பாடல்களில் வலம்வரும் கதாநாயகியாக இல்லாமல் கதையின் நாயகியாகவே மனதில் நிற்கிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. ஈழத் தமிழர்களின் துயரத்தை தூக்கி சுமக்கும் பெண்ணாக கவனம் ஈர்க்கிறார்.ஜேம்ஸ் காஸ்மோ ஒவ்வொரு காட்சியிலும் கண்ணசைவில் இருந்து உடல்மொழி, வசனங்கள் என அனைத்திலும் பீட்டர் எனும் இனவெறி பிடித்த அசல் கேங்ஸ்டராகவே வலம் வருகிறார். 

கேங்ஸ்டர் திரைப்படங்களின் மீது தனக்கு எவ்வளவு பெரிய காதல் என்பதை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். மிக அழுத்தமான கதை களத்தை கேங்ஸ்டர் களத்தில் சேர்த்து சிறப்பான தரமான சம்பவம் செய்திருக்கிறார். 

படத்தின் மற்றொரு ஹீரோ சந்தோஷ் நாராயணன் தான். பல இடங்களில் வரும் பின்னணி இசை  ஹாலிவுட் திரைப்படங்களை உணரும் அனுபவத்தை கொடுக்கிறது.ஷ்ரெயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் சுருளியின் பரோட்டா கடையில் நடக்கும் சண்டை காட்சி மிரள வைத்திருக்கிறது.

கதைக்களம்  கதாப்பாத்திரங்கள் காட்சியமைப்புகள் என அத்தனையிலும் சிறப்பாக சம்பவம் செய்திருந்தாலும் ஒரு சில இடங்களில் காட்சிகள்  கொஞ்சம் மந்தமாக நகரும் உணர்வை கொடுக்கிறது. வழக்கமாக படம் முழுக்க எதிர்பார்க்க முடியாத திருப்பங்களை கொடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையில் ஆங்காங்கே மட்டும் திருப்பங்கள் இருப்பதும் எளிதில் கணிக்கும் படியாக இருக்கும் இரண்டாம் பாதியின் சில காட்சிகளும் கொஞ்சம் ஏமாற்றம் தான். ஈழத்தின் வலியும் புலம்பெயர் மக்களின் வாழ்வை சொல்லும் களமும் மனதை தொடவில்லை.ஆனால் சுருளியாக நடிகர் தனுஷின் நடிப்பு படத்தில் உள்ள அத்தனை குறைகளையும் மறைத்து மாயாஜாலம் காட்டுகிறது.