சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து பொங்கல் விருந்தாய் இன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன். கொரோனா காலகட்டத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து முடிக்கப்பட்ட திரைப்படமாகும். அதுமட்டுமல்லாமல் சிலம்பரசன் தனது உடல் எடையை குறைந்து புதிய பரிமாணத்துடன் நடித்த படம் இந்த ஈஸ்வரன். வாருங்கள் கலாட்டா திரை விமர்சனத்திற்குள் போவோம்...

விவசாயத்தை தொழிலாக கொண்டு வாழும் கிராமத்து வாசி பெரியசாமி (பாரதி ராஜா). குடும்பம் தான் உயிரென வாழும் பெரியசாமியின் வாழ்வில் சோழி பிரசன்னம் (சோழி போட்டு ஜோதிடம் பார்ப்பது) ஓர் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. இதிலிருந்தே ஈஸ்வரன் படத்தின் கதை ஆரம்பமாகிறது. மனைவியை இழந்த பெரியசாமி தன் பிள்ளைகளை ஒற்றை தகப்பனாக இருந்து வளர்கிறார். பிள்ளைகளோ பிழைப்புக்கு சென்னையில் செட்டில் ஆக...தந்தையை ஆண்டுக்கு ஒரு முறை வந்து சந்திக்கின்றனர். துணை இல்லாமல் தவிக்கும் பெரியசாமியை (பாரதி ராஜா) இமை போல் காத்து வருபவனே இந்த ஈஸ்வரன்(சிலம்பரசன்). 

பூக்கள் இருந்தால் அதை சுற்றி முட்கள் இருக்கதானே செய்யும். அதே போல் ஓர் கதையில் நல்லவன் என ஒருவன் இருந்தால் வில்லன் இருக்கதானே செய்வான். அப்படி பெரியசாமியின் குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறான் ரத்னசாமி (ஸ்டண்ட் சிவா). ரத்னசாமி சிறையில் இருந்த வரும் நேரத்தில், கொரோனா காரணமாக லாக்டவுனில் சொந்த ஊருக்கு வருகின்றனர் பெரியசாமியின் பிள்ளைகள் மற்றும் பேர பிள்ளைகள். ரத்னசாமியிடம் இருந்து குடும்பத்தை ஈஸ்வரன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இந்த ஈஸ்வரன் படத்தின் கதைச்சுருக்கம். 

பழனி ஊருக்குள் VIPகள் வந்தால் கோவிலுக்கு கூட்டி செல்வது, நண்பர்களுடன் ஜாலியாக இருப்பது, பெரியசாமியின் நம்பிக்கை உரியவராக இருக்கிறார் கதாநாயகன் சிலம்பரசன். சிம்புவிடம் அப்படி ஒரு எனர்ஜி. கோவில், சரவணா போன்ற படங்களில் பார்த்த சிம்புவை மீண்டும் கொண்டுவந்துள்ளார் சுசீந்திரன். நடிப்பு மற்றும் நடனம் இவை இரண்டுமே சிம்புவின் ஹோம் கிரௌண்ட். திரையில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஈர்க்கிறார் சிம்பு. வசனங்களில் பெர்ஃபெக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகளில் ஓர் அமைதி, வில்லன்களிடம் பேசுகையில் ஓர் முரட்டு சுபாவம் என மிரட்டியுள்ளார் சிலம்பரசன். படம் முழுக்க லுங்கி, துண்டுடன் கிராமத்து வாசியாக வலம் வந்துள்ளார். 

ஈஸ்வரனை ரூட் விடும் மாமன் மகளாக ஜொலித்திக்கிறார் நாயகி நிதி அகர்வால். நிதி அகர்வாலின் அலட்டிகொள்ளாத பேரழகு பார்ப்போரை கவர்கிறது. ஈஸ்வரனின் நண்பராக குட்டி புலி என ரோலில் கலக்கியிருக்கிறார் பால சரவணன். டைமிங் காமெடி, எதார்த்தமான நடிப்பு என கிராமத்து கதைகளுக்கு ஏற்ற ஒருவராக விளங்கினார் பால சரவணன். பண்ணையாரும் பத்மினி, திருடன் போலீஸ் போன்ற படங்களுக்கு பிறகு இந்த ஈஸ்வரன் படத்தில் நல்ல ரோலில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமா இது போன்ற நகைச்சுவை கலைஞர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும். இந்த தருணத்தில் நடிகர் முனீஸ்காந்தை பாராட்டியே ஆக வேண்டும். வரும் காட்சிகளில் வசதியாக ஸ்கோர் செய்கிறார். ஒரு கட்டத்தில் இவரால் திருப்புமுனை ஏற்படுகிறது. 

படத்தில் வரும் சில காட்சிகள் அர்ஜுன் நடித்த ஏழுமலை, அஜித் நடித்த வீரம் படத்தின் காட்சிகளை நமக்கு நினைவுபடுத்துகிறது. இயக்குனர் இமயமாக இருந்தாலும், நடிப்பில் நம்மை கவர்கிறார் பாரதிராஜா. உதாரணத்திற்கு ஒரு காட்சியில் அவர் அழுகும் போது நம் கண் கலங்குகிறது. அப்படி ஓர் எதார்த்தம். பாரதிராஜாவின் சிறுவயது பாத்திரத்தில் அவர் மகன் மனோஜ் நடித்திருந்தது பொருத்தமாக இருந்தது. 

படத்தின் ரன் டைம் குறைவாக இருந்தது படத்திற்கு மிகப்பெரிய பக்க பலம். ஆனால் கிளைமாக்ஸ் காட்சி கணிக்கும்படி இருந்தது. இரண்டாம் பாதி துவங்கியவுடன் இப்படி தான் கதை நகரப்போகிறது என்பது அனைவருக்கும் தெரியும் வகையில் இருந்தது. வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்.. என் கண்ணு வேணும்னு கேட்டியாமே என்று கேட்பாரே அவர் தான் இந்த ஸ்டண்ட் சிவா. அரக்க குணம் நிறைந்த ரத்னசாமி ரோலில் இன்னும் அவரை கொடூரமாக செயல் பட வைத்திருக்கலாம். அடியாட்களிடம் இருந்து பெரியசாமி குடும்பம் தப்பிப்பது, ஜோதிடர் பாத்திரத்தில் ஓவர்டோஸ் போன்ற சிறு சிறு லாஜிக் மீறல் தெளிவாக தெரிகிறது. 

கிளைமாக்ஸ் காட்சியில் சிலம்பரசன் பேசும் வசனத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று சொல்ல தோணுகிறது. நீ அழிக்க வந்த அசுரன்னா... நான் காக்க வந்த ஈஸ்வரன் என்ற பஞ்ச்சை தவிர மற்ற வசனங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். எடிட்டிங் கட்ஸில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்திருக்கலாம் என்பது விமர்சகர்களின் கருத்து. இன்டர்வலின் போது ஈஸ்வரன் கூறும் விஷயமே, கிளைமாக்ஸ் காட்சிக்கு முடிச்சு போடுகிறது. படம் வெளியதற்கு முன் சர்ச்சையை கிளப்பிய பாம்பு பிடிக்கும் காட்சிகள் கிளாப் தட்டும் விதமாக இருந்தது. குறிப்பாக அதன் CG காட்சிகள் சபாஷ். 

படத்தின் இசையமைப்பாளர் தமன்...தமன் என்றால் தரம். தரமான ஆல்பத்தை தந்து இசை பிரியர்களை கவர்ந்துள்ளார். ஓப்பனிங் சாங் தமிழன் பாட்டு, செவிகளுக்கு தேனூட்டும் வெள்ளி நிலவு பாடல், சிம்பு குரலில்  மாங்கல்யம் பாடல், கதைக்கு பொருத்தும் பிண்ணனி என சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறைந்த நாட்களில் ரசிகர்கள் விரும்பும் இசையை தந்த தமனுக்கு தனி சல்யூட்.  

பார்த்து பழகிய கதைக்களமாக இருந்தாலும் சுசீந்திரன் மற்றும் படக்குழுவினரின் முயற்சி ரசிகர்களை ஈர்க்கும். ஆக மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இருக்கும் இந்த ஈஸ்வரன்.