சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையில், “அணியின் நிர்வாகத்தோடு தோனி மோதலா?” என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், “சுரேஷ் ரெய்னாவிற்காக தோனி பிடிவாதமாக உள்ளாரா?” என்று புயலை கிளப்பும் அளவுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

ஐபிஎல் தொடர் ஆரம்பமான கடந்த 2008 முதலே கேப்டன் மகேந்திர சிங் தோனி, நிரந்தரமாக சென்னையில் கேப்டனாகவே இருந்து வருகிறார். அதே நேரத்தில், கேப்டன் மகேந்திர சிங் தோனி தனக்கே உண்டான பாணியில், தனது அணியைத் திறம்பட வழி நடத்திச் சென்றதோடு, ஒரு வலிமை மிக்க அணியாகவே பாதுகாத்து வந்தார். ஆனால், தற்போது சென்னை அணி வலிமை இழந்து, இந்த ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கூட செல்ல முடியாத நிலை உருவாகி இருக்கிறது என்றே சொல்லப்படுகிறது.

குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கடந்த 8 ஆண்டுகளாக ஜொலித்து வந்த சுரேஷ் ரெய்னா, அணியின் நிர்வாகத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, போட்டியிலிருந்து விலகி இந்தியா திரும்பினார். ஆனால், சென்னையின் நிர்வாகத்தினர் ரெய்னாவை சமாதானம் செய்யவில்லை. 

அதே நேரத்தில், “சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்றால், அவர் 11 கோடி ரூபாயை இழப்பார் என்றும். சென்னை அணி ஒரு குடும்பம் போன்றது அதில் யாருக்குப் பிடிக்கவில்லையோ அவர்கள் வெளியேறலாம் என்றும், சென்னை அணியின் உரிமையாளரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சீனிவாசன் தெரிவித்தார்.  

சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து, ஹர்பஜன் சிங்கும் சென்னையில் அணியின் நிர்வாகத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை ரசிகர்கள் சிலர் டிவிட்டரில் “சென்னை அணியின் துணை கேப்டன் யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு சென்னை அணியின் நிர்வாகம் தரப்பில் “கேப்டன் தோனியைச் சுட்டிக்காட்டி ‘வைஸ்’ கேப்டன் இருக்கும் போது வைஸ் கேப்டன் எதற்கு?” என்று நக்கலாக பதில் அளித்திருந்தனர்.

இந்நிலையில் தான், சென்னை அணி எதிர்கொண்ட மும்பைக்கு எதிரான போட்டியில், அம்பத்தி ராயுடுவின் துணையோடு முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், அதன் பிறகு களம் இறங்கிய இரு போட்டிகளிலும் ஜெயிக்க கூடிய சூழல் இருந்தும், சென்னை அணி மந்தமாக விளையாடி வேண்டும் என்றே தோற்றது போல் இருந்தது.

இதன் காரணமாக, கேப்டன் மகேந்திர சிங் தோனி மீதும், அவரது கேப்டன் ஷிப் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

குறிப்பாக, கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடும் போது, அவரிடம் பழைய உத்வேகம் இல்ல என்றும், அவருடைய கேப்டன் ஷிப் துளியும் இல்லை என்றும், கூறப்படுகிறது.

அதாவது, கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போதும் முதல் 3 ஓவர்களில் விக்கெட் விழ வில்லை என்றால், உடனே அவர் சுழற்பந்து வீச்சாளர்களை களம் இறக்கி வீக்கெட்டை வீழ்த்தி எதிர் அணியைத் திணறடிப்பது அவர் வழக்கம்.

அதே நேரத்தில், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள், அணியில் ஜொலிக்காத மற்ற வீரர்கள் என்று, அணியில் பல்வேறு மாற்றங்களை தோனி அதிரடியாக நிகழ்த்திக் காட்டுவார்.

ஆனால், இந்த முறை முதல் போட்டியில் நன்றாக விளையாடிய அம்பத்தி ராயுடுவை ஓரம் கட்டிவிட்டு, புதுமுக வீரர் ருத்ராஜ் என்பவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் முதல் போட்டியிலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆன நிலையில், 2 வது போட்டியிலும் அவர் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தார். 

குறிப்பாக, கேப்டன் தோனி இறங்க வேண்டிய இடத்தில், அவர் இறங்காமல் கேதார் ஜாதவ்வை தொடர்ந்து முன் கூட்டியே பேட்டிங் ஆடச் சொல்லி களம் இறக்கி விடுகிறார். ஆனால், அவரும் ரன்கள் சேர்க்காமல் சொதப்பி வருகிறார்.

அதே போல், முரளி விஜயும் பேட்டிங், பீல்டிங் என எதிலும் ஜொலிப்பது இல்லை. ஆனால் அவரை மாற்றாமல், அவருக்கு ஏன் அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது? அவருக்கு ஏன் தோனி முக்கியத்துவம் கொடுக்கிறார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதே போல், வீரர்களை மாற்றி மாற்றி இளம் இறக்கும் தோனி, பிராவோ மற்றும் இம்ரான் தஹிரை இன்னும் ஏன் அவர் களம் இறக்கவில்லை? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

முக்கியமாக, விளையாடும் போது எந்த மாற்றங்களும் செய்யாமல், “ தோனி அமைதியாகவே இருப்பது ஏன்? இது தோனியின் வழக்கம் இல்லை. தோனியின் கேப்டன் ஷிப் தற்போது நேர் எதிர்மறையாக இருப்பது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.

இதனால், தோனி சென்னை அணியின் நிர்வாகத்தோடு மன வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், “ சென்னை அணியின் நிர்வாகத்தோடு தோனி மோதலா?” என்ற சந்தேகம் தற்போது சென்னை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அதே நேரத்தில், “சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை அணிக்குத் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தோனி பிடிவாதமாக உள்ளாரா?” என்று புயலைக் கிளப்பும் அளவுக்கு அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், இது எதற்கும், தோனியோ அவர் சார்பிலோ அல்லது சென்னை அணியின் நிர்வாகம் தரப்பிலோ யாரும் எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்து வருகின்றனர்.

அதே நேரத்தில், சென்னை அணி விளையாட உள்ள அடுத்த போட்டி நடைபெற இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில், அதற்குள் சென்னை அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து, சென்னை அணி புத்துயிர் பெறும் என்றும் கூறப்படுகிறது.