பிரசவத்தின் போது மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால், பெண்ணின் பிறப்புறப்பில் வைக்கப்பட்ட பேண்டேஜ் தற்போது அகற்றப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகாலை சேர்ந்த 28 வயதான ஷாகின் உத்னால், என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாகினுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதன் காரணமாக,  அந்த பெண் பிரசவத்திற்காக விஜயாப்புரா டவுனில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்து உள்ளனர். இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, அந்த பெண் அதே மருத்துவமனையில் ஒரு வார காலம் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு, தாயும், சேயுமாக நலமுடன் இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், தாயார் ஷாகினையும், அவரது குழந்தையையும் டிஸ்சார்ஜ் செய்து உள்ளனர். இதனையடுத்து, அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக அப்பெண் ஷாகினுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. வயிற்று வலி காரணமாக, அந்த பெண் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதற்காக, அவர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், அவருக்கு ஏற்பட்ட வயிற்று வலி சரியாக வில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வயிற்றில் கட்டி எதுவும் உள்ளதா? என்பதை கண்டறியப் பாதிப்புக்கு உள்ளான ஷாகின், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்தார். அப்போது, ஷாகினின் வயிற்றுக்குள் துணி வைத்து தைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

மேலும், பிரசவத்தின் போது வெளியேறிய ரத்தத்தை துடைக்க அப்போது, அரசு மருத்துவர்கள் துணியை பயன்படுத்தியதும், அந்த துணியை அகற்றாமல் வயிற்றில் வைத்து தைத்து விட்டதும் தெரிய வந்தது. மேலும், ரத்த போக்கை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர் பேண்டேஜை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு சென்ற பாதிப்புக்கு உள்ளான பெண் ஷாகின், அந்த அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பணியில் இருந்த சில மருத்துவர்களின் கவனக்குறைவால், இது போன்று நடந்து விட்டதாக, இளம் பெண் ஷாகினிடம், மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த துணியை மருத்துவர்கள் அகற்றினார்கள். 

இதனையடுத்து, “கவனக்குறைவாகத் தனது வயிற்றில் துணையை வைத்து மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, இளம் பெண் ஷாகினின் உறவினர்கள், போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.