2019-20 நிதியாண்டிற்கான தனிநபர் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

வருடத்திற்கு இரண்டரை லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ம் தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, அக்டோபர் 31-ம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இக்காலத்தில் வரி செலுத்துவது போன்ற செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதால் பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளுக்கான கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டன. குறிப்பாக, 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. 

கடந்த ஜூன் 24ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2019-20 நிதியாண்டுக்கான அனைத்து விதமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடு 2020 நவம்பர் 30 வரை நீடிக்கப்பட்டது. இதன்படி, 2020ஆம் ஆண்டில் ஜூலை 31, அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரியை 2020 நவம்பர் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய தேவை எழுந்தது. 

இந்நிலையில், 2019-20 நிதியாண்டிற்கான தனிநபர் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோருக்கு, வருமான வரி வருமானம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2021 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.