கொரோனாவிலிருந்து உலகம் முழுவதுமாக விடுபட, தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என்பது மருத்துவத்துவர்கள் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் தடுப்பூசிகள் கண்டறியும் பணி உலகம் முழுவதும் வேகமாக நடந்து வருகிறது.

ரஷ்யா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவிட்ட போதும், அது பாதுகாப்பானதாக அறியப்படாமல் இருக்கிறது. இவையாவும் ஒருபுறமிருக்க, உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி தடுப்பூசி ஆய்வில் முன்னனியில் இருப்பதாக சொல்லப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான ஆய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கையாளப்படுகின்றன.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தி குணப்படுத்துவதற்காக இந்தியாவில் நான்கு வகையான தடுப்பூசி பரிசோதனை நடந்து வருகின்றன. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஐதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு தடுப்பூசி விநியோகத்துக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தடுப்பூசிகளை இருப்பு வைப்பது, முதலில் யாருக்கு கொடுப்பது என்பது போன்ற பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு அடுத்தடுத்த ஆலோசனைகளையும் நடத்தி புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிகளை தன்னிச்சையாக கொள்முதல் செய்து பயன்படுத்த முடியாது என்று தெரிகிறது. அதுபோல தடுப்பூசி வினியோகத்தையும் தன்னிச்சையாக மாநில அரசுகள் முடிவு செய்ய இயலாது. மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வினியோக பணிகளை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

குறிப்பாக தடுப்பூசி பயன்படுத்துவது மற்றும் வினியோக திட்டங்களை மத்திய அரசின் நிபுணர்குழு முடிவுக்கு ஏற்பவே செயல் படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தடுப்பூசி வினியோக பணிகளில் மாநில அரசுகள் பட்டியல் மட்டும் தயாரித்து கொடுத்து விட்டு மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலகளவில் 150க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக, ஆக்ஸ்ஃபோர்டு, மாடர்னா, பிஃபைசர், ஜான்சன் & ஜான்சன் ஆகியவை தயாரித்த தடுப்பூசிகள் முன்னணியில் இருக்கின்றன. இந்தியா சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் தடுப்பூசிக்கும் மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வாரம்தான், புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா ``இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி டிசம்பர் மாத தொடக்கத்தில் தயாராகிவிடும். 10 கோடி டோஸின் முதல் தொகுதி 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் கிடைக்க வேண்டும். நாங்கள் அடுத்த ஆண்டின் இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டுக்குள் 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இந்தியாவிலும், உலகளவிலும் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி பாதுகாப்பை பொறுத்தவரை பிரச்சினை இல்லை.

இப்போதைக்கு அவசர உரிமத்திற்கு நாங்கள் செல்கிறோம். அவசர உரிமத்திற்கு நாங்கள் செல்வதற்கு காரணம், எங்கள் சோதனைகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய வேண்டும். அதன்பின் தடுப்பூசி உற்பத்தியை நாங்கள் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்" என்று  தெரிவித்தார்.