ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. 

INX Media Case PChidambaram Bail

ஏற்கனவே ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். 

இதனையடுத்து, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி, ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

பின்னர், சி.பி.ஐ. வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், உடனே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அப்போதே மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உடனடியாக அவருக்கு ஜாமீன் கிடைக்காததால், தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

INX Media Case PChidambaram Bail

பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான இறுதி விசாரணைகள் அனைத்தும், கடந்த மாதம் 28 ஆம் தேதி நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது  ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், பேட்டி கொடுக்கவோ, வெளிநாடு செல்லவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதனால் மிகச் சரியாக 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு அவர் இன்று வெளியே வருகிறார். ஜாமீன் நடைமுறைகள் முடிந்து, இன்று மாலை ப.சிதம்பரம் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.