மே 28ம் தேதி, தெற்கு பெங்களூரு துணை ஆணையர் அண்ணாமலை தனது பதவியை ராஜிநாமா கடிதத்தை அவர் சமர்பித்துள்ளதாக கூறி, தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை இணையத்தில் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில், ஆறு மாதங்கள் நன்றாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கடிதத்தில் தெரிவித்த அண்ணாமலை, கடந்த ஒன்பது ஆண்டுகால காவல்துறையின் பணியில், ஒவ்வொரு நொடிபொழுதையும் தனது காக்கி உடைக்கான பணியை வாழ்ந்து காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
 
காக்கியால் வருகின்ற பெருமையை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது என்று தெரிவித்த அவர், போலீஸ் வேலை கடவுளுக்கு மிகவும் நெருக்கமான வேலை என்று கூறினார். தனக்கு பிடித்த ஐபிஎஸ் மதுக்கார் ஷெட்டியின் இறப்பு தனது சொந்த வாழ்க்கையை சுய ஆய்வுக்குட்படுத்தி பார்க்க தூண்டியதாக அண்ணாமலை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் பதவியை ராஜிநாமா செய்வதன் மூலம் கஷ்டங்களை வழங்கக்கூடாது என்பதாலேயே, தேர்தல்கள் முடிந்த பின்னர், இந்த முடிவை நிறைவேற்றியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் புது டெல்லியில் ஆக.25 ம் தேதி மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், பாஜக மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை,  தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன். பதவியை எதிர்பார்த்து பாஜகவில் இணையவில்லை. சாதாரண தொண்டனாகவே வந்துள்ளேன் என்று கூறினார்.

தற்போது கோவையில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை உள்பட பாஜகவின் தலைமை பிரமுகர்கள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜகவில் இணைந்த பிறகு முதன்முறையாக கோவைக்கு வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கோவை காந்திபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக கோவை காட்டூர் போலீசார், அண்ணாமலை உட்பட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, கோவை மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 143, 341, 269, 285 ஆகியவற்றின் கீழும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 3இன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக கூடுதல், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுதல், நோய்பரப்பும் வகையில் செயல்படுதல், ஆபத்தை விளைவிக்கும் செயல்படுதல் மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய ஐந்து குற்றங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் சிங்கம் போலீஸ் என்று அழைக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை 3 தினங்களுக்கு முன்புதான் அண்ணாமலை பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.