அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் படம் அக்னிச் சிறகுகள். இதில், அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் கதை வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள், கஜகஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதம் கஜகஸ்தான் நாட்டுக்குச் சென்ற படக்குழு அங்கு உறைபனி குளிரில் படப்பிடிப்பை நடத்தியது. அங்குள்ள அல்மாட்டி நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை படமாக்கினர்.

ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து உள்பட சில ஐரோப்பிய நாடுகளிலும் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பாக படக்குழு இந்தியா திரும்பியது. சமீபத்தில் படக்குழு கொல்கத்தா சென்றதாக தகவல் வெளியானது. அங்கு சில முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தனர். அக்‌ஷரா ஹாசனை வைத்து ரீ ஷூட் செய்தனர் என்று செய்திகள் வெளியானது.  

கடைசியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் ஆண்டனி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களோட சேந்து ப்ளாட்பாரத்துல உக்காந்து, ரோட்டுக்கட டீ சாப்டுகிட்டு சிரிச்சி பேசி செட்ட கலகலனு வெச்சிருக்க எங்களோட ஹீரோ இருக்கறவரைக்கும் எங்க ஷூட்டிங் ஸ்பாட்ல சோர்வு வரவே வராது. விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ரெண்டு பேருமே தங்கம் என பாராட்டினார். 

இந்நிலையில் அக்னிச் சிறகுகள் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் நவீன். இதனால் இப்படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்ற ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.