தனது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கோமாளி,லவ் டுடே படங்களின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் யூட்யூப் THUMBNAIL குறித்து பேசியபோது அஜித் குமார் உடன் பணியாற்ற இருந்த AK62 திரைப்படம் கைவிடப்பட்டது பற்றி பேசினார். அப்படி பேசுகையில், "நமக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. ஒரு வாய்ப்பு வரவில்லை. எல்லாமே ஒன்றுதான். இப்போது நாம் ஒரு வரிசையில் இருக்கிறோம். திடீரென அந்த வரிசையில் முன்னால் போய் நாம் நிற்கிறோம். அப்போது திடீரென என்ன சொல்கிறார்கள் 'கொஞ்ச நேரம் காத்திருங்கள் அவர் போகட்டும்' என வேறு ஒருவர் நமக்கு முன்பு வருகிறார். இது வாழ்க்கையில் ஒரு வட்டம். எனவே நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, திடீரென ஒரு நாள் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் ஒரு நாள் கிடைக்கும். எனவே அதை அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். நான் வந்து ஒரு ரசிகன். ஒரு ஹீரோ உடைய பெரிய ரசிகன் நான். அவருடன் பணியாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது, அதற்கான விஷயங்கள் அதற்கான வேலைகள் எல்லாம் நாம் பண்ணுவோம். ஏதோ சில காரணங்களால் சில விஷயங்கள் நடைபெறவில்லை என்றால் மீண்டும் என்றாவது ஒரு நாள் நடக்கும் போது அது இன்னும் அழகாக இன்னும் சிறப்பாக நடக்கப் போகிறது என்பது போல் தான் நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் எப்படி இருந்தாலும் எந்த விஷயம் நடந்தாலும் அது சரியாகத்தான் நமக்கு நடக்கும். எனக்கு முதல் படம் நான் போடா போடி பண்ணும்போது 2007ல் அந்த படம் துவங்கியது 2008ல் அந்த படம் நடக்கவே நடக்காது என இருந்தது. ஆனால் 2010ல் படப்பிடிப்புக்கு சென்றோம் 2012ல் படம் ரிலீஸ் ஆனது. அந்தப் படத்திற்கு பிறகு எனக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அப்போது நான் மீண்டும் போஸ்டர்கள் டிசைன் செய்வதற்கு போனேன். அப்படி போஸ்டர் டிசைன் செய்ய போன போது தான் எனக்கு தனுஷ் சார் அவர்களின் உடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அங்கிருந்து திடீரென எனக்கு நானும் ரவுடி தான் படம்... அப்புறம் நானும் ரவுடி தான் படத்தின் கதையை சொல்வதற்கு நான் நயன்தாராவை பார்க்க போகிறேன். அங்கே வேறு ஒன்று நடக்கிறது. படம் ஒன்று எடுக்கிறோம். அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நா‌ள் முன்பு அந்தப் படம் சரியாக இல்லை என ஒரு விமர்சனம் வருகிறது. நானும் நிஜமாகவே படம் சரியாக இல்லையோ என நினைத்து விட்டு, மிகவும் வருத்தப்பட்டு அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு கூட செல்லாமல் இருந்தேன் பயத்தில், மாலை 6:00 மணி வரைக்கும் செல்போன் கூட எடுக்காமல் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்து மாலை 6:00 மணிக்கு தான் ஆன் செய்தேன். இந்த உலகை சந்திப்பதற்கு பயந்து கொண்டு, ஆனால் அந்த சமயத்தில் படம் நன்றாக அமைந்தது. படம் ஹிட் ஆனதே எனக்கு தெரியாது. என்ன ஆனாலும் எதிர்கொண்டு தானே ஆக வேண்டும் என போனை ஆன் செய்து பார்த்தால் தான் தெரிந்தது படம் நன்றாக இருக்கிறது என போட்டிருந்தது. சாந்தோம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது மூன்று நாட்களில் சத்யம் தியேட்டருக்கு மாறியது. அந்த சத்யம் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தேன் எல்லோரும் பயங்கரமாக சிரித்தார்கள் ரசித்தார்கள் பாட்டுக்கு எல்லாம் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. அந்த தருணமும் இப்போது இருக்கும் இந்த தருணமும் ஒன்றுதான்." என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார். வைரலாகும் அந்த முழு வீடியோ இதோ…