பலாத்கார வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே குற்றவாளி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சிபுரம் வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு பகுதியைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள ஹோட்டல் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 8 வயதுச் சிறுமியை அழைத்து, தனது வீட்டுத் திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், சிறுமியை, வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

மேலும், இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி அனுப்பி உள்ளார்.

இதனையடுத்து, வீட்டிற்குச் சென்ற சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்தேகப்பட்டு, சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, தனக்கு நேர்ந்த பாலியல் அவலங்களை மருத்துவர்களிடம் சிறுமி கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கோட்டீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கோட்டீஸ்வரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கு தொடர்பாகத் தனது வழக்கறிஞர்களிடம், அவர் விசாரித்துள்ளார். அப்போது, “வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், தண்டனை உறுதியாகிவிடும்” என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த காணப்பட்ட கோட்டீஸ்வரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.