வயது முதிர்வு காரணமாக WWE ஜாம்பியன் அண்டர்டேக்கர், தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியாகத் திகழ்கிறது WWE ஜாம்பியன் மல்யுத்த போட்டி. இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு இணையான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சியாக WWE என்னும் வேர்ல்ட் ரெஸ்லிங் ஜாம்பியன் மல்யுத்த நிகழ்ச்சி திகழ்கிறது. இந்தியாவில் மட்டும் இப்போட்டியை சுமார் 34 கோடி மக்கள் காண்பதாகக் கூறப்படுகிறது.

இந்த போட்டியில், ஹிட்மேன் அண்டர்டேக்கர், ராக், ஜான்சீனா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

இவர்களில், அண்டர்டேக்கர் இன்னும் ஸ்பெசல். அரங்கம் முழுவதும் பயங்கர இருட்டு. அரங்கத்தையே மிரளவைக்கும் மணியின் ஓசை. கக்கும் புகைக்கு நடுவே 6 அடி உயரத்தில் அசுரன் போல் கம்பீரமாய் ஒய்யரமாய் உயர்ந்த மனிதன் போல் பயம் அறியாதவனாய் நிற்பவர் தான் அண்டர்டேக்கர்.

இவர் ரிங்கிற்குள் நுழைந்துவிட்டால், அவரை எதிர்த்து நிற்கும் எதிரிகளுக்குப் பீதி கிளம்பும். ரசிகர்கள் மத்தியிலோ மிகப் பெரிய ஆராவாரம், விசில் சத்தம் எல்லாம் அரங்கத்தையே அதிர வைக்கும். அந்த அளவிற்கு அண்டர்டேக்கர் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார்.

'மார்க் வில்லியம் கால்வே' என்பது தான் அண்டர்டேக்கரின் இயற்பெயர். இவர், ஒரிரு ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளாக WWE என்னும் வேர்ல்ட் ரெஸ்லிங் ஜாம்பியன் மல்யுத்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

WWE வேர்ல்ட் ரெஸ்லிங் போட்டியில் ஒருமுறை, சவப்பெட்டியில் அவரை அடக்கம் செய்வது போல் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. ஆனால், மீண்டும் எதிரிகளுடன் சண்டையிட ரிங்கிற்குள் அவர் வந்ததும், அவருக்கு டெட்மேன் என்ற பெயரும் அவரது ரசிகர்களால் சூட்டப்பட்டது.

அண்டர்டேக்கர், WWE வேர்ல்ட் ரெஸ்லிங் போட்டியில் இதுவரை ஒரு முறை கூட தோற்றதில்லை. ரெஸ்லிங்மேனியாவின் 36 வது தொடரில், அண்டர்டேக்கர் கடைசியாக ஏ.ஜே.ஸ்டைல்ஸ் உடன் மோதி வெற்றி பெற்றார். அந்த வெற்றியின்போது, தனது பைக்கில் பிரியா விடை பெற்றார். அப்போதே அவர் ஒய்வு பெறுவார் என்று பலரும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, “தி லாஸ்ட் ரைடு“ என்ற தொடரின் மூலமாக, WWE வேர்ல்ட் ரெஸ்லிங் போட்டியின் தனது 30 ஆண்டுக்கால அனுபவங்களையும், நினைவுகளையும் அவர் பகிர்ந்து வந்தார். அந்த தொடரின் கடைசியில் “நான் மீண்டும் ரிங்கிற்குள் திரும்பப்போவதில்லை” என்று கூறி தனது ஓய்வை அறிவித்து அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓய்வை அறிவித்துள்ள அண்டர்டேக்கருக்கு தற்போது 55 வயது என்பது குறிப்பிடத்தக்கது.