விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகில் உள்ள வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான அன்பரசி, அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான விஸ்வநாதனை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கிப் பழகி வந்ததுடன், நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த மாதம் விஸ்வநாதனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த தகவல் அன்பரசிக்கு கிடைத்த நிலையில் அதிர்ச்சியடைந்த அவர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அங்கு, புகார் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அன்பரசி, கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், விஸ்வநாதனுக்கு நாளை மறுநாள் திருமணம் நடைபெற இந்தத்தை அறிந்த அன்பரசி, “என் காதலன் எங்கே?” என்று எழுதப்பட்ட ஒரு சிலேட்டுடன், காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அவர் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.