உன்னாவ் பலாத்கார வழக்கில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரம் பற்றி எரிந்த நிலையில், என்கவுன்டர் மூலம் அந்த “காம தீ” அணைக்கப்பட்டது. ஆனால், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் இன்னும் எந்த புதிய வரலாறு எழுதப்படாமல், இருக்கும் பழைய வரலாறு எல்லாம்.. தூசி படிந்து மூலையில், முடங்கிக்கிடக்கிறது.

அப்படி மூலையில் முடங்கிக்கிடந்த உன்னாவ் பலாத்கார வழக்கில், தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், அந்த மாநிலத்திலும் “பிரச்சனை என்னும் தீ” கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி இருக்கிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த சுபம் திரிவேதி, சிவம் ஆகியோர், கடந்த டிசம்பர் மாதம் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அவரை பாலியல் அடிமையாக வைத்திருந்து, நாள்தோறும் சித்திரவதை செய்தனர்.

அங்கிருந்து எப்படியோ மீண்டு வந்த அந்த இளம் பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் உடனடியாக புகாரை ஏற்றுக்கொள்ள வில்லை. பின்னர், நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகே, போலீசார் வழக்குப் பதிவு செய்து பலாத்காரம் செய்த இருவரில் சிவம் என்பவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு குற்றவாளி சுபம் திரிவேதி தலைமறைவானார்.

இதனையடுத்து, சிவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அதிகாலை நேரத்தில் ரயில் நிலையம் வந்துகொண்டிருந்தார்.

அப்போது, சுபம் திரிவேதி, சிவம் மற்றும் அவர்களுடைய மற்ற 3 நண்பர்கள் சேர்ந்து, அந்த பெண்ணை வழிமறித்து கண்மூடித்தனமாகத் தாக்கி உள்ளனர். பின்னர், அங்கேயே, அந்த பெண் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.

இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணிடம் வாக்கு மூலம் பெற்றனர். அதன்படி, பெண்ணை தீ வைத்து எரித்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். குறிப்பாக, தனக்குப் பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது என்றும், இது தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்து, தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று 2 முறை முறையிட்டும், போலீசார் எதையும் செய்யவில்லை என்றும் மரண படுக்கையில் கூட அந்த பெண் கூறியதை, அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டது.

இதனிடையே, தீயில் எரிந்த பெண்ணுக்கு 90 சதவீதம் தீ காயங்கள் ஏற்பட்டதால், அந்த பெண், உயர் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நள்ளிரவில் உயிரிழந்தார். இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தால் அடுத்தடுத்து பெண்கள் உயிரிழந்து வரும் நிலையில், தற்போது உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில், மேலும் ஒரு பெண் உயிரிழந்திருப்பது, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.