உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவிகளைக் கேலி செய்தவரை, பெண் போலீஸ் ஒருவர் 22 முறை செருப்பாள் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில்கூட உன்னாவ் பலாத்கார வழக்கில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் விதமாக, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேச போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று காலை பள்ளி செல்வதற்காக, பள்ளி மாணவிகள் ஏராளமானோர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர்.

அப்போது, அங்கு வந்த காதல் ரோமியோ ஒருவன், பெண்களைக் கேலியும், கிண்டலும் செய்து, லூட்டி அடித்துக்கொண்டு இருந்தான்.

இதையெல்லாம் அங்குள்ள பேருந்து நிறுத்ததிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த பெண் போலீஸ் ஒருவர், காதல் ரோமியோ எல்லை மீறிப் போகவே, ஆத்திரமடைந்த அவர், அந்த காதல் ரோமியோவை அடித்து நொறுக்கி உள்ளார். மேலும், அவருக்குக் கோபம் அதிகமானதால், தான் அணிந்திருந்த காலணியைக் கழற்றி, அந்த இளைஞரை வெளுத்து வாங்கினார். சுமார் 22 முறை, அந்த இளைஞரை தன்னுடைய காலணியால் அடித்துத் துவைத்துள்ளார்.

இந்த காட்சியை, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்தபடியே, கடந்து சென்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சிலர் மனித உரிமை மீறிய செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.