உத்தரப்பிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை, தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.

ஐதராபாத்தில் கடந்த வாரம் 26 வயது இளம் பெண் மருத்துவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைத்து எரித்து கொன்ற சம்பவத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. தற்போது, அதை நினைவூட்டும் விதமாக உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னா பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர், கடந்த மாதம், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் கடுமையாக மிரட்டி அனுப்பி உள்ளனர்.

இதனையடுத்து, வீடு திரும்பிய அந்த இளம் பெண், அடுத்த சில நாட்களில், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்தும், அந்த இளம் பெண்ணுக்குத் தொடர்ந்து, கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இது தொடர்பாகவும் அந்த இளம் பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்து, தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று 2 முறை முறையிட்டுள்ளார். ஆனால், போலீசார் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில், அந்த இளம் பெண் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்திற்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர், அங்கு வந்து, அந்த இளம் பெண்ணை தீ வைத்து எரித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்களால், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 80 சதவீதம் தீ காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அந்த பெண் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, தீ வைத்து எரித்த 5 பேரில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம் பெண், உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.