விஷ ஊசிபோட்டு மகன் - மகளை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் குல்ஷன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு 18 வயதில் ஹரித்திகா என்ற பெண்ணும், 17 வயதில் ஹரித்திக் என்ற பையனும் இருந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், மனமுடைந்து காணப்பட்ட குல்ஷனும், அவரது மனைவியும் முதல் நாள் இரவே, தனது இரு பிள்ளைகளுக்கும் விஷ ஊசிபோட்டு கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து, கணவன் - மனைவி மற்றும் அவர்களது பங்குதாரர் சஞ்சனா என்ற பெண்ணும், அவர்கள் வசித்து வந்த 8 வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளனர்.

இதில், 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ஒருவர் பின் ஒருவராகப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்கள் வீட்டைச் சோதனை செய்தனர். அங்கு ஒரு கடிதம் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

அதன்படி, கணவன் - மனைவி மற்றும் அவர்களது பங்குதாரர் சஞ்சனா ஆகியோர்களுக்கும் இடையே கள்ளத் தொடர்பு பிரச்சனை எழுந்ததாகவும், மேலும் அவர்களுக்குள் பணம் பிரச்சனையும் இருந்ததாகவும் இதன் காரணமாகவே, தங்களது குழந்தைகளுக்கு விஷ ஊசிபோட்டு கொன்றுவிட்டு, அவர்களும் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.