உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என டெல்லி நீதிமன்றம்அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு, வேலை கேட்டுச் சென்ற 17 வயது இளம் பெண்ணை பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங், கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை கைது செய்தனர்.

இதனால், அவர் பா.ஜ.க.விலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் சென்ற காரை, லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். ஆனால், அந்த காரில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்தியது எம்.எல்.ஏ. குல்தீப் சிங் தான் என பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் புகார் அளித்தார். இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து,இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி உன்னாவ் பலாத்கார வழக்கு, விபத்து வழக்கு உள்ளிட்ட மொத்தம் 5 வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 9 ஆம் தேதியுடன், முடிவடைந்தது. அதன்படி, இன்று தீர்ப்பு வழங்குவதாகக் கடந்த 10 ஆம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூறியது.

அதன்படி, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது. அதன்படி, எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேன்கார், சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியாகியுள்ளதாக நீதிமன்றம் கூறியது.

அத்துடன், பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்றும் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது. தண்டனை விவரம் டிசம்பர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், பாலியல் பலாத்கார வழக்கில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு எது மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்று நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.