இந்திய - சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா எல்லையான லடாக் பகுதியில், சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், இந்திய எல்லையில், சீன தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் லடாக் பகுதியில், சீனா தனது ராணுவத்தைக் குவித்தது. இதற்குப் பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தைக் குவித்தது. இதனால், இந்திய - சீன எல்லையில் போர் பதற்றம் உருவானது.

இதன் காரணமாக, இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதாக அறிவித்த நிலையில், லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், நேற்று மாலை 6 மணி அளவில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது.

முதலில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். சீன வீரர்கள் இந்தியப் படையினர் மீது முதலில் கற்களை வீசி தாக்கியதாகத் தெரிகிறது. கற்களாலும், கம்பிகளாலும் தாக்கிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அங்கு கடுமையான பதற்றம் நிலவியது.

இந்த தாக்காதலில், இந்தியா தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவரும், 2 வீரர்களும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதில், வீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான பழனி என்பதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, இந்த பயங்கர மோதலில் இந்திய வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்தது. அதேபோல், சீனா தரப்பிலும் 43 வீரர்கள் பலியானதாகக் கூறப்படுகிறது.

எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, பின்னர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு, லடாக் எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டு, பதற்றம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி வெப்ப நிலையில் இந்திய வீரர்கள் போராடியதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு, எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே கடும் சண்டை நடந்துள்ளதால், அங்கு தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, லடாக் மோதல் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துவருவதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.